Thursday, December 27, 2012

அனுபவம் பேசுகிறது


சுவையான பால்கோவா தயாரிப்பது எப்படி?
...
முதலில் அரை லிட்டர் பாலை உங்கள்
மனைவியையோ அல்லது வீட்டில்
யாரையாவதோ
வாங்கி வைத்துவிட்டு (பிரிஜில் அல்ல)
ஊருக்கோ அல்லது மருத்துவமனையில்
யாரையாவது பார்க்கவோ போக சொல்லிவிடுங்கள்...
(எனக்கு மனைவியே மருத்துவமனைக்கு
போக வேண்டிய சூழ்நிலை)

நான்கு அல்லது ஐந்து மணி நேரம் கழித்து
காய்ச்சாத அந்த பாலை காய்ச்சவும்..

பால் திரிந்து திரி திரியானால் நீங்கள்
புண்ணியம் செய்தவர்....
இல்லயென்றால்
இன்னும் 5  அல்லது 6 மணி நேரம் காத்திருக்கவும்...

பின்பு தண்ணீரை வடித்து விட்டு ஐந்து
தேக்கரண்டி சர்க்கரை கலந்து கிளரவும்

சுவையானா பால்கோவா ரெடி...........

Wednesday, December 19, 2012

திருமண வாழ்த்து

                           சிறுவயதில் பெண் பிள்ளைகள் தந்தையின் ஆதரவுடன் அதிகாரம் வீட்டில்  கொடிகட்டி பறக்கும். அண்ணனோ தம்பியோ வீட்டில் வம்பு சண்டை அல்லது சிறு உதவி செய்யாத போது சகோதரி மூலம் தந்தைக்கு தகவல் பறக்கும். எனவே சகோதரி என்றாலே உடன் பிறந்த சகோதரனுக்கு ஆகாது, 
            சிறுவயது போராட்டம் குரோதம் .கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பிக்கும். சகோதரி பெரியவளாக ஆனா பின்பு மரியாதை கலந்த பாசம் பிறக்கும் .சகோதரி மணவாழ்க்கை சிறக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பிப்பது பாசத்தின் எல்லை என்றே கூறலாம்.
            சகோதரி, சகோதரனின் தியாகத்தை எவ்வளவு நாள் உள்ளத்தில் வைத்திருப்பாள் என்பது கால சக்கரத்தின் சுழற்சியும் வாழ்க்கை சூழ்நிலையுமே நிர்ணயிக்கும்.
      இப்படித்தான் `வீட்டில்அதிகாரம்  கொடிகட்டி பறந்த` தன் அருமை 
தங்கையான எங்கள் அத்தைக்கு எங்கள் அப்பா வரைந்த வாழ்த்து மடல்  
     
மணமகன் : பழனிசாமி - மணமகள் : தனலட்சுமி   
                     13.11.1972 திங்கள் கிழமை. 
                     இடம் :வெள்ளகோவில்
                    
இது வண்ணத்தால் அச்சிட்ட வாழ்த்தல்ல... 
உள்ளத்தால் உருவாக்கப்பட்ட ஓவியம். 
கோலமிட்ட மணவரையில் கைகோர்த்து 
கொஞ்சிவரும் முழுநிலவில் குலவிட துடிக்கும் புதுமணப்பூக்களே... 
அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள்! 
என வாழ்த்தும் வாழ்த்தல்ல!! 

வாழ்க்கையின் வாசற்படியில் வலது காலை வைத்து நிற்கும் 
சிட்டுக்களுக்கு என் இதய...த்தில் பூட்டி வைத்திருந்த 
எண்ணங்களின் பொற்கலசம். . .

தங்குதடையின்றி கங்குகரை புரண்டு 
பொங்கிப்பெருகி வரும் காவிரியின் 
புதுப்புனல் போல துள்ளி வரும் என்
மனத்தின் எண்ண அலைகளை எழுத்தானியில் 
இழையவிட்டு இதயமென்னும் ஏட்டினிலே ஓடவிட்டு 
இருகரத்தால் ஏந்திவந்து வாய்திறந்து கொட்டுகின்றேன்.... 

கொங்குத்திருநாட்டின் தங்கமே... 
புலிக்குலத்துதித்த பொற்கொடியே.. 
மாவிலைப்பந்தலின்கீழ் மலர்விழி 
நிலம் நோக்கி நிற்கின்ற மாதரசியே.... 
எங்கள் குலப்பேரரசியே !!........ 

இன்று நீ வரப்போகும் வாழ்நாளின் 
இன்ப நினைவுகளில் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கலாம் ...
ஆனால் நானோ கடந்த காலத்தில் பிறந்த பின்... 
வளர்ந்தபின்... ஓரளவு உலகத்தை அறிந்தபின்.. .........

அன்றுமுதல் இன்றுவரை மறைந்துபோன 
நாட்களில் மறக்க முடியாத சில 
பொன்னான நாட்களையும் புண்ணான நாட்களையும் 
சிந்தித்துப் பார்கின்றேன். ............

பள்ளிப் பருவத்திலே ஏட்டுக்கும் எழுத்தாணிக்கும் போட்டி,
தீபாவளித்திரு நாளிளே பட்டாசுக்குப் போட்டி, 
பொங்கள் புதுநாளிளே புத்தாடைக்குப் போட்டி, 
பங்கித்தரும் திண்பன்டம் சரிபாதியாயினும் 
அதிலே குறை நிறையென ஏளனச் சண்டை, 
பருவம் வந்தது அன்பிலும், பாசத்திலும், 
ஆயிரமாயிரம் சண்டை,,,

அவை அனைத்தும் இன்று என் கண்முன்னே நின்று...
என்னை செயலற்றவனாக் சிந்திக்கவைக்கின்றது ......ம்....... 

ஆணுக்கு ஆணாகும்... பெண்ணுக்குப் பெண்ணாகும் 
என் கண்ணுக்குக் கண்ணாகும்... 
என்று சொல்லிச் சொல்லி ஊட்டி வளர்த்தார் 
உன்னை நம் தந்தை... 

இன்றோ சிறகு முளைத்து விட்டது 
வாழ்க்கை யென்னும் வண்ணப்பூந்தோட்டத்தில் 
வட்டமிடச்செல்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி 
பன்னீரால் பாதபூஜை செய்து விடை பெற்றுவிட்டாய். 

நீ இட்டதுதான் கட்டளை, 
வைத்ததுதான் சட்டம் , 
அதை வடிவமாக்க வேண்டியதுதான் கடமை என்ற 
உன் அதிகாரத்திற்கு அடிமைப்பட்டுக்கிடந்தது நம் அரண்மனை. 

அங்கே அமைச்சனாக இருக்கவேண்டிய 
நான் அதிகாரமற்றவனாகவே வாழ்ந்து விட்டேன். 
இன்றோ வாழ்க்கையென்னும் போர்களத்தில் 
கணவனென்னும் தலைவனுக்கு சாரதியாய்....கேடயமாய்...
செல்லப்போகும் உனக்கு அறிவுரைகள் கூறவேண்டியது 
இந்த அமைச்சனுடைய கடமை என்றுணர்ந்து...
என் இதயத்தை வண்ணமலர் 
வாழ்த்தாக்கிக் கொண்டு வந்தேன் ..........

புகுந்த வீ ட்டின் சிறப்புகளையே பேசு.
அது பிறந்த வீ ட்டின் பெருமையை தானாக கொண்டு வரும், 
நம்மை கொத்திக்குதற வட்டமிடும் வல்லூறு 
பொங்கி வரும் கோபம்..... ஆக அது பொல்லாதது, 

எது வாயினும் சரி 
அது ஏற்றதாழ்வாயினும் சரி 
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்,
பொங்குமாங்கடலினும் பெரிது பொருமை 
அது வாழ்வைப் புனிதமாக்குகின்றது, 

சீறிவரும் அனலைப் புனல்கொண்டு தனிக்கலாம்...

பொங்கிவரும் புனலை எதுகொண்டு தடுக்கலாம் ?!!
அக்காட்டாற்றுப் புனல் போலாம் பொறாமையும்..
பொருப்பின்மையும்.., துள்ளி வரும் சூறைக்காற்றாம் 
பகட்டும்...படோடோபமும்.., 

பெண்புத்தி பின்புத்தி நீ சிறிதாக நினைப்பதுதான்.....
ஒரு சிலருக்குப் பெரிதாகத் தெரியும் , 
உன் கை கொண்டு உன் கண்ணை நீயே 
குத்திக்கொள்ள ஆசைப்பட்டால் பிறர் மேல் 
கோள் சொல்லும் கொடிய பழக்கத்தை நீ ஏற்றுக்கொள்ளலாம்,

 எதற்கும் அறிவுரை கூறவேண்டியது 
மனைவியின் பொருப்பு, ஆனால் 
முடிவெடுக்கவேண்டியது கணவனின் கடமை...
முடிவான பின் அது தவறாயினும் !!! சரியே 
அதை தட்டிக்கழிப்பதும், வெட்டிப்பேசுவதும் பெண்ணுக்கு அழகல்ல, 

ஆசையே அழிவுக்கு அஸ்திவாரம், 
வண்ண வண்ண பட்டாடையும் 
வயிரம்பதித்த பொன்னகையும் 
அணிந்து அழகு பார்பதுமட்டும் வாழ்க்கையல்ல... 

நாங்கள் பூட்டிவிட்ட பொன்னகையின் எடை 
பத்தென்பது பாவையுனக்கு குறையெனப்படலாம் 
ஆனால் உன் ஒளிமயமான வாழ்க்கையின் 
இன்பத்தில்தான் எங்கள் இதயம் நிறைந்திருக்கின்றது...

வந்ததையும்..,வாழ்ந்ததையும்.., 

வரும் வாழ்க்கையையும்.., எண்ணிப்பார் ,!!!
 காலத்தின் கரங்களிலே நாமெல்லாம் அலைகடல் 
துரும்பென்ற சூழ்நிலையில் நின்று சிந்தித்துப்பார்,!! 

அப்பொழுது தெரியும் இரத்தத்தில் 
கலந்த இந்த உறவும்..
சித்தத்தில் பிறந்த அன்பும்,
இதயத்தின் பாசமும், 
ஆயிரமாயிரம் பொன்னுக்குச்சமம் என்பது ...

மாப்பிள்ளை நல்லவர்...வல்லவர்.. 

பொருப்பிற்க்கும், பொருமைக்கும் சிகரம், 
அந்த சிகரத்தின் உச்சியிலே பதிக்கப்பட்ட மாணிக்கம்தான் 
எங்கள் வானத்து வெண்நிலவு...

குடும்பம் ஒரு கோவில் ,

கொண்டவனே தெய்வம் என்ற நினைவோடு, 
தமிழ்த்தாய் வழிவந்த நாணமும், மானமும், நால்வகைப்பன்புமே ... 
சீராகவும் அள்ளிச்செல்லும் பாவையே !!!? 

இன்னும் ...இன்னும் எண்ணற்ற 
கோடி எழுதவேண்டும் 
என இதயம் துடித்தாலும், 
மன ஆழத்தில் என்னங்கள் புதையுண்டு கிடந்தாலும் 
ஏட்டிலே இடமில்லாத காரணத்தினால்........... 

பல்லாண்டு...பல்லாண்டு... 
யுகயுகமாய்... வாழ்வாங்கு வாழ வாழ்த்தும் ..
அன்பிற்கும் பாசத்திற்க்கும் அடிமையான .....கு.சண்முகம்

Tuesday, December 18, 2012

கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ரா வின் கதைகளில் ஒன்று (18+)

"இப்ப நா ஒரு கதெ சொல்றேன்" என்று ஆரம்பித்தார். கதை சொல்லி தாத்தா!

ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தான் கிட்டான் என்ற `விடலை`

" ஒரு காட்லெ நூறு கழுதைக இருந்துச்சு, அதுல தொன்னுத்தி ஒம்பது கழுதைக ஆம்பிளைக் கழுதைக. ஒரே ஒரு கழுதை மட்டும் பொட்டைக் கழுதை."
  அந்த நாயி,பூனை,கழுதைக இதுக்கெல்லாம் ஒரு 'சீசன்' உண்டு. அந்தச்  சீசன்(காலம்) வந்துட்டதுன்ன பாவம், இந்த ஒரே ஒரு போட்டிக் கழுதை தொன்னுத்தி ஒம்பது கழுதைகளுக்கும் ஜவாப் தரமுடியாம ரொம்பதான் அல்லடிப்போகும். அய்யோ அய்யோ என்று கதறும்; இந்த கதறல் காடெல்லாம் எதிரொலிக்கும்.

 இதுக்கு மத்தியில், இந்த பொட்டக் கழுதையை அடைய ஆம்பிளை கழுதைக்குள்ள பயங்கர சண்டை நடக்கும். பலசாலிகள் இப்படி சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறப்ப நோஞ்சான் பூஞ்சான் கழுதைக பூந்து வெளையாடும்! உடனே பலசாளிக் கழுதைகள் ரண்டு ஓடிவந்து  இந்த நோஞ்சான் பூஞ்சானை நாலு உதை கொடுக்கும். இதுகள் வலி பொறுக்க முடியாமல் காள் காள்ன்னு கத்தும். கத்திக்கொண்டே, நாங்கள்ளாம் கழுதைகள்  இல்லையா; நீங்க தாம் கழுதைகளா; எங்களுக்கும்  ஆசை இராதா என்று ஞாயம் பேசும்.

என்ன பேசி என்ன செய்ய; பலசாளிகள்ட்டெய்யும்  முரடங்க கிட்டெயும் ஞாயம் எடுபடுமா?

இப்படியாக காடே ஒரு தூசிக்கோட்டையா ஆயிக்கிட்டுருக்கு.

இந்த 'ரணகளத்த' மரத்து மேலே இருந்த ஒரு கரிச்சான் பறவை பார்த்துகிட்டே இருந்தது. அந்த போட்டிக் கழுதெ படுற பாதறவைப் பார்க்கச் சகிக்கலெ. 'என்ன அநியாயம், கொஞ்சம் ஈவு இறக்கம் வேண்டாமா? தொன்னுத்திவொம்பது கழுதகளோட ரோதனைய ஒரு போட்ட கழுத தாங்குமா என்கிற ஞாயம் கொஞ்சம் கூட தெரியலயெ இந்த மட கழுதைகளுக்கு. விருதாத் தடி கழுதைகளா வந்து சேந்துச்சுன்னு, அந்த கரிச்சானுக்கு ரொம்ப வருத்தாமே போச்சி.

 ஆனாலும் நாம என்ன செய்ய முடியும்ன்னு யோசிசிச்சுகிட்டே அதுக பக்கத்துல வந்தது. கரிச்சானை பார்த்ததும் பொட்ட கழுதெ ஒன்னு அழுதது; இந்த வங்கொடுமெ உண்டுமா தங்கச்சின்னுட்டு.

சுத்தி நின்ன உலக்கை கழுதைகளையெல்லாம் , தூரப் போங்க, தூரப் போங்கன்னுட்டுக்  கீச்சுக் குரல்ல கரிச்சான் கத்திச்சு. "நான் சொல்றத கேக்கீளா கொஞ்சம்ன்னுட்டு  கேட்டது. சரீன்னு ஒப்புக் கொண்டது கழுதகேயெல்லாம்.

பொட்டை கழுதையோட முதுகுல உக்காந்துகிட்டு அதுகளோட விவகாரத்தை கேட்டது.

ஒரு பெரிய கழுதை ஞாயம் சொன்னது கரிச்சானிடம், "இந்த பாரு கரிச்சானு;
 நான் சொல்றத நல்ல கேட்டுக்க; பிறகு ஆ...ஊ...ங்கப்படாது. நாங்க உங்க குருவிக மாதிரியில்லெ; நெனைக்கிற போதெல்லாம் தெனேமும் 'இருந்து'கிட்டுருக்க. எங்களுக்கு ஏற்பட்டது வருஷத்துக்கு ஒருக்கதான்.  அதும் குறிப்பிட்ட ஒரு மாசம் தான். அதுக்குள்ளார நாங்க செஞ்சு முடிச்சுறனும். இப்போ விட்டச்சின்னா அடுத்த வருஷந்தான்; நல்ல கேட்டுக்கோ கரிச்சனோவ்'" என்றது.

 அதுக்கு கரிச்சான், "அது சரிதான் பெரியாளு; நீ சொல்றதெல்லாஞ் சரிதான். அந்த பொட்டே ஒத்தப்பேரியா இருந்துகிட்டு உங்க இத்தன பேருக்கும் ஜவாப் தரமுடியுமா? ஒரு நெல்லக் குத்துறதுக்கு நூறு உலக்கை இறங்குனா நெல்லுதான் தாங்குமா?" என்று கேட்டதும் ஒரு பெரிய்ய முரட்டுக் கழுதைக்கு கோவம் வந்துவிட்டது.

"நீ  என்ன ஞாயம் பேசுறே; போ ஒஞ்சோலியப் பாத்து. நாங்கலாச்சி எங்க காரியமாச்சி" என்று சொல்லி, முதல்ல விலகிக்கொ என்று கால்களை தூக்கிப் போட ஆரம்பித்துவிட்டது.

முதுகில் இருந்த கரிச்சான் எவ்வளவோ தடுத்துப் பார்த்தது. மொரட்டு கழுதெ கேக்குறாப்ல இல்ல. என்ன செயறதுன்னுட்டு கரிச்சானுக்கு தெரியல.

கரிச்சானுக்கு தடுத்து நிறுத்த ஒரு வழி தான் தெரிஞ்சது. முதுகில் இருந்த  கரிச்சான் பொட்டக் கழுதையின் "அறை"யை தன் உடம்பால் பொத்தி மறைத்துக் கொண்டது.

மொரட்டுக் கழுதை அதை ஒன்னும் கவனிக்கல. அதுபாட்டுக்கு ஏறி இறங்கிட்டது. கரிச்சானை பார்த்தா காணோம்! எங்க போச்சி? என்று தெரியாமல் கேட்டான் கிட்டான்.

கிட்டான் முகத்தை பார்த்தார் தத்தா.

தாத்தா சொன்னார்.

கரிச்சான் எங்கேயும் போகல. பொட்டக் கழுதையோட கருப்பைக்குல்லாற போயிட்டது! என்றார்.

"சர்வ மூடர்களின் மத்தியில் நீதியை எடுத்துச் சொல்லியதோடு மட்டுமில்லாமல் அதை நிலைநாட்ட முயல்கிறவர்களுக்கு இப்படி தான் இழிவான சாவு கிடைக்கும்" என்றார் தாத்தா.
''வயது வந்தவர்களுக்கு மட்டும்`` என்ற கி.ரா வின் கதை தொகுப்பிலிருந்து.......