Monday, November 5, 2012

பராசக்தி பாணியில் நித்தியானந்தா


நித்தியானந்தாவின் பராசக்தி வசனம்!!!


நமது சிறப்பு சாமியார் நித்தியானந்தாவின் உள்மனம் சொல்லும் குமுறலை கேளுங்கள், கண்டிப்பாக உங்களுக்கு சிரிப்பு வரும்.

தன்மீது சுமத்தப்படும் குற்றங்களுக்கு பராசக்தி பாணியில் நித்தியானந்த பதிலளிக்கிறான் பாருங்கள்.

______???______ நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால், இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல.. 

வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில் நானும் ஒருவன்.. சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்.. 

கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. குற்றம் சாட்டப்படிருகிறேன் இப்படியெல்லாம்.. ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை... 

சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்.. ஏன்??? மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவா?

இல்லை.. மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை வளரவேண்டும் என்பதற்காக.. கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. ஏன்..?? காற்றுவரவேண்டுமென்பதற்காகவா? இல்லை.. அந்த நடிகை ஈசியாக ருமுக்குள் வரவேண்டும் என்பதற்காக... 

நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. ஏன்??? எனக்கு கால் வலி என்பதனாலேயா?....இல்லை அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக.... 

உனக்கேன் இவ்வளவு அக்கறை??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்.. நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக நேரடியாகப் பாதிக்கப்பட்டேன், எனது சுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறது,

என்னை குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை, உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்... 

நான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால் ஆன்மீகப்புத்தகம் படித்திருக்கிறேன்.. நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்.. கேளுங்கள் என் கதையை, என்னை அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..

இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர், போலிச்சாமியார்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா??? தமிழ்நாட்டில் இல் பிறந்த நான், ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி வந்தேன், ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம் என்றது... 

என் பெயரோ நித்தியானந்தா, கேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர். ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது 

நான் மட்டும் நினைத்து இருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம், ஏதாவது ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம், கஞ்சா பிசினஸ், கழவெடுத்தல் என்று காலத்தை ஓட்டி இருக்கலாம். ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த பரந்த உலகம், 

நடிகை மாட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்.... ஓடினேன்... மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தான்.... ஓடினேன் நேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை யூ டியூப்பில் போட்டான்...... ஓடினேன் ஓடினேன் ஓடினேன்.... கேரளாவுக்கு ஓடினேன் கர்நாடகாவுக்கு ஓடினேன் பெங்களூருக்கும் ஓடினேன் ஓடினேன் ஓடினேன்...... இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் ஓடினேன்...

எனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல் தாங்காமல் திரும்பி வந்து விட்டேன். என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும், 
வீடியோவை யூரியூப்பில் போக்கி இருக்க வேண்டும், என்னை தப்பியோட கதவைத்திறந்து விட்டிருக்க வேண்டும் இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர். 

செய்தார்களா? தப்பியோட விட்டார்களா இந்த நித்தியானந்தாவை, 

என்னை சாமி என்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்?? எனது குற்றாமா? என்னை நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா? நான் சொன்னதை நம்பி கதவைத்திறந்து வைத்தது யார் குற்றம்? கதவைத்திற காற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமா? கேனைத்தனமாக என் பேச்சை நம்பிக்கதவைத்திறந்த மூடர்களின் குற்றமா? எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம்?, காலைப்பிடித்துவிடும்படி கூறிய எனது குற்றமா? இல்லை மாத்திரை தந்துவிட்டு காலைப்பிடித்து விட்ட நடிகையின் குற்றமா?? இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில், என்னை போன்ற நித்தியானந்தாக்கள், ஏமாற்றும் போலிகளாகத்தான் உருவாகிக்கொண்டிருப்பார்கள்.....

படித்ததில் பிடித்தது......

Wednesday, October 31, 2012

விழித்திருப்போம்........


சட்டம் நம் கையில்.............

Consumer Protection Act 1986
இச்சட்டம் தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என அழைக்கப்படுகிறது. 1986 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் தேதியன்று அமுலுக்கு வந்தது. ஏற்கனவே அமுலில் உள்ள சட்டத்தின் மூலம் நிவாரணம் பெற வாய்ப்பு இருந்தும் தனியாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டதின் அடிப்படை நோக்கமே – எளிய முறையில், குறுகிய காலத்தில், செலவில்லாமல் நிவாரணம் பெற வேண்டும் என்பதே. சாதாரமாக, நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்படும் பொழுது அது சிவில் வழக்காக மாறிவிடும். இதனால் வழக்கு, நீதிமன்ற நடைமுறைப்படியே நடை பெற்வதால் காலதாமதம் ஏற்படுவதுடன், பெரும் செலவும் ஏற்படும். பெரும் தொகை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் நீதி மன்றத்தை அணுகுவது இல்லை. இச்சட்டத்தின் மூலம் இந்த குறைபாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இனி அது பற்றி பார்க்கலாம்.
நுகர்வோர் நீதிமன்றங்களின் ( Consumer Court ) அமைப்பும், செயல்பாடும்:
கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று இருப்பதை போலவே இச்சட்டப்படி – மாவட்ட அளவில் ” மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள்”, மாநில அளவில் “மாநில ஆணையம்”, தேசிய அளவில் ” தேசிய ஆணையம்” அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம்:
20 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளை, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தான் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது கிடையாது. இதனால் வழக்கு தொடருவதற்கு தகுதியே இல்லாத பிரச்சனைக்கெல்லாம் வழக்கு தொடர ஆரம்பித்தனர். இதில் எதிர் தரப்பினரை பிளாக் மெயில் செய்பவர்களும் அடங்கும். இது போன்ற வழக்குகளுக்கு அவர்கள் ஆஜராவது கிடையாது. இதனால் வழக்கு தள்ளுபடியாகும் நிலை ஏற் பட்டது. இதனால் தவறே செய்யாத எதிர் தரப்பினர்களுக்கு கால விரயம் மற்றும் செலவு ஏற்படுவதையும், நீதிமன்றத்தின் நேரம் வீணாவதையும் கருத்தில் கொண்டு 2006 ம் ஆண்டில் கீழ் கண்டவாறு கட்டணம் நிர்ணயம் செய்ய்ப்பட்டு ள்ளது.
  • 1 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு = 100 /-
  • 1லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-
  • 5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-
  • 10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /-
வழக்கு தொடர தேவையான தகுதிகள்:
  1. வழக்கு தொடருபவர் நுகர்வோராக இருக்கவேண்டும். வழக்கு அவர் சம்பந்தப் பட்டதாக் இருக்கவேண்டும்.
  2. நுகர்வோர், எந்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட எல்லைக்குள் ( Jurisdiction) இருக்கிறாரோ அதில் தான் வழக்கு தொடரவேண்டும்.
  3.  புகாருக்கான ஆதாரங்கள் இருக்கவேண்டும்.
  4. பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து 2 வருடங்களுக்குள் வழக்கு தொடர வேண்டும்.
யார் மீது வழக்கு தொடர முடியும்?
1. நமக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும். இதில் தனியார், அரசு நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருமே இதில் உட்படுவர்.
உதாரணம்: மளிகை கடை, டிபார்ட்மெண்டல் ஸ்டோர், பேக்கரி, சைக்கிள் – பைக் – கார் – லாரி விற்பனையாளர், மெடிகல் ஷாப், ரேஷன் கடை போன்றவை.
2. பணம் வாங்கிக்கொண்டு வழங்கப்படும் சேவைகள், தனியார் மற்றும் அரசு துறை நிறுவனங்கள் அனைத்துமே இதில் அடங்கும்.
உதாரணம் : மின்சார வாரியம், குடிதண்ணீர் சப்ளை, இன்ஸூரன்ஸ் கம்பெனி, வங்கிகள், மருத்துவ மனைகள், கியாஸ் கம்பெனிகள், சப் -ரிஜிஸ்டிரார் அலுவலகம், போன்றவைகள்.
எந்தெந்த துறைகள் எல்லாம் இதில் அடங்கும் என சட்டத்தில் பட்டியலிடப் படவில்லை. காரணம். சேவை என்ற வார்த்தைக்கு முழுமையான விளக்கம் கொடுக்க முடியாது. வார்த்தைக்கான விளக்கம், வழக்குக்கு வழக்கு விரிவடையும் என்பதே உண்மை. உதாரணத்திற்கு சப்-ரிஜிஸ்டிரார் ஆபீஸை எடுத்துக்கொள்ளலாம். இந்த சட்டம் வந்த பின்பு, பலர் இந்த அலுவலகத்தில் அவஸ்தை பட்டு வந்தாலும், இது அரசு அலுவலகம் என நினைத்து விட்டு விட்டனர். பல வருடங்கள் இப்படியே கழிந்தது.
ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் ஒரு சொத்து வாங்க முடிவு செய்து, அதற்கு சம்பந்தப்பட்ட சப்- ரிஜிஸ்டிரார் அலுவல்கத்தில் வில்லங்க சர்டிபிகேட்டிக்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் செய்தார். எந்த வில்லங்கமும் இல்லை என சர்டிபிகேட் கொடுத்து விட்டனர். அதை நம்பி, அவர் அந்த சொத்தை வாங்கி விட்டார். அதன் பின்பு தான் அதில் வில்லங்கம் இருப்பது தெரிய வந்தது. அதனால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. தவறான வில்லங்க சர்டிபிகேட் டிப்பார்ட்மெண்ட் கொடுத்ததினால்த் தான் நஷ்டம் என்றும், வில்லங்க சர்டிபிகேட் வழங்குவது என்பது பணத்தை பெற்றுக்கொண்டு வழங்கப்படும் சேவை என்பதால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி குறைபாடான சேவை என்பது அவர் முடிவு. அவர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அரசு தரப்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி தங்கள் மீது வழக்கு தொடர முடியாது என்றும், சர்டிபிகேட்டில் தவறுகள் இருந்தால் இலாகா பொறுப்பு அல்ல” என குறிப்பிட்டே வழங்கட்டுள்ளதால் தாங்கள் பொறுப்பல்ல என வாதம் செய்தனர். ஆனால் அவர்களின் ஆட்சேபனையை நிராகரித்த் நீதிமன்றம் மனுதாரருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. இது சட்டம் பற்றிய விளக்கம் விரிவடையக் கூடியது என்பதற்கு ஒரு உதாரணம்.
வழக்கு தொடர தேவையான முன் நடவடிக்கைகள்:
உதாரணத்திற்கு நாம் ஒரு கடைக்குப்போய் ஒரு பொருள் வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதன் பாக்கிங்கில் போடப்பட்ட விலைக்கு அதிகமாக பணம் வாங்கினாலோ, எடை மற்றும் அள்வு குறைவாக இருந்தாலோ அல்லது தரம் குறைவாக இருந்தாலோ உடனடியாக அதைப் பற்றி கடைக்காரரிடம் சுட்டிக்காட்டுங்கள். அவர் தவறை சரி செய்ய மறுத்தால், அவருக்கு நீங்களே ” குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதை சரி செய்யாவிட்டால் நுகர்வோர் வழக்கு தொடரப்படும்” என அத்தாட்சியுடன் கூடிய பதிவு தபாலில் நோட்டீஸ் அனுப்புங்கள். அவருக்கு நோட்டீஸ் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்பதற்கான் ஆதாரத்தை நோட்டீஸ் காப்பியுடன் வைத்துக்கொள்ளுங்கள். அதைப் போலவே பொருள் வாங்கியதற்கான ரசீதும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
விலை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், விலை அச்சடிக்கப்பட்ட பாக்கிங் கவரை பத்திரமாக வைத்திருங்கள்.
தரம் சம்பந்த பிரச்சனை என்றால், அதே பாக்கிங் கவருடன் பொருளை பாக் செய்ய்து வைத்துக்கொள்ளுங்கள்.
எடை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், நீங்கள் பாக்கிங்கை பிரிப்பதற்கு முன்பே எடை குறைவு என்பதை ஊர்ஜிதம் செய்து விட்டு பாக்கிங்கை பிரிக்காமல் இருக்க வேண்டும். ஒரு வேளை பிரித்துவிட்ட பின்பு தான் எடை குறைவை கண்டு பிடித்தீர்கள் என்றால், பிரிக்கப்பட்ட பாக்கிங்கை ஆதாரமாக வைத்து வழக்கு தொடர முடியாது. எனவே மறுபடியும் அதே கடைக்கு போய், அதே பொருளை, பில் போட்டு வாங்கிக்கொளுங்கள்.
இப்பொழுது சேவை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், சேவைக்கான ரசீது இருக்கவேண்டும். முன்பு குறிப்பிட்ட படியே சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புங்கள். எல்லா அத்தாட்சிகளையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி
சட்டம் நம் கையில்.........

Wednesday, October 24, 2012

காகிதமும் ஆயுதமாகும்

லஞ்சத்துக்கு எதிராக எத்தனையோ அமைப்புகள், நாடு முழுவதும் போராடிக் கொண்டிருக்கின்றன; ஆனாலும், லஞ்சம் ஒழிந்தபாடில்லை; காரணம், இந்த போராட்டங்களிலே மக்களின் பங்களிப்பில்லை. லஞ்சத்தை ஒழிக்க ஆயுதம் ஏந்திப் போராட வேண்டியதில்லை; ஒரே ஒரு காகிதம் போதும். தகவல் உரிமைச் சட்டம் என்பது, இந்திய மக்களுக்குக் கிடைத்த மாபெரும் ஆயுதம்; அதைப் பயன்படுத்தி, லஞ்சத்திலிருந்து தப்பித்திருக்கிறார் ஒரு வாசகர்.

அவரது அனுபவம்...

நான், திருப்பூர், தொங்குட்டிபாளையத்தைச் சேர்ந்தவன். கடந்த 2010, டிச.19ல் கொஞ்சம் மது அருந்தி விட்டு, எனது வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வழியில், போதையில் வாகனம் ஓட்டியோரை போலீசார் பிடித்தனர். ஒவ்வொருவரிடமும் அபராதம் என்ற பெயரில், தலா 2,000 ரூபாய் வாங்கினர்; எதற்கும் ரசீது இல்லை.

பலரும் பணம் கொடுத்துச் சென்று விட்டனர். எனக்கு லஞ்சம் தர விருப்பமில்லை. பணம் தராததால், எனது வண்டியை அருகிலுள்ள டூ வீலர் ஸ்டாண்ட்டில் நிறுத்தச் சொன்னார்கள்; நிறுத்தி விட்டு, வீடு திரும்பி விட்டேன். அதன்பின், பல முறை அணுகியும் போலீசார் என் மீது நடவடிக்கை எடுக்கவில்லை; வண்டியையும் தரவில்லை.

நான் வாக்குவாதம் செய்ததால், எனது ரேஷன் கார்டை வாங்கிக் கொண்டு, வண்டியைக் கொடுத்தனர். பல நாட்கள் அலைந்தும் ரேஷன் கார்டைத் தரவில்லை; நான் தகவல் உரிமைச் சட்டத்தில், "குறிப்பிட்ட தேதியில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக எத்தனை பேர் மீது வழக்கு பதிவானது' என்பது உட்பட பல விபரங்களைக் கேட்டு, எஸ்.பி., ஆபீசுக்கு மனுச் செய்தேன்; பதில் வந்தது.

அன்றைய நாளில் 151 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 2 பேரிடம் மட்டுமே கோர்ட் மூலமாக 1,900 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சோதனை நடந்து 8 மாதங்கள் கழித்தும் அதே நிலைதான்; இந்த விபரங்களை வைத்து, திருப்பூர் எஸ்.பி.,யிடம் நேரடியாக மனு கொடுத்தேன்; அவர் எடுத்த அதிரடியில், அடுத்த ஒரு மணி நேரத்தில் எனது ரேஷன் கார்டு, எனது கைக்கு வந்தது.

எப்படியோ, லஞ்சம் தரக்கூடாது என்று நான் போராடிய போராட்டத்துக்கு வெற்றி கிடைத்தது................ 


தினமலர் 08.01.2012 ல் வெளிவந்த கட்டுரை.................. சாத் சாத் நானே தான்.......................... 

ஆடுறா ராமா.... ஆடுறா ராமா....

28.09.2012
திருப்பூர் அருகே வெள்ளகோவிலில் 
அத்தை வீட்டுக்கு சென்றிருந்தேன். 
பேச்சு வாக்கில் eb யில் ஒரு பிரச்சனை என்றார்கள். 
நமக்கு தான் பிரச்சனை என்றாலே ”அல்வா” மாதரி... 
விவரம் கேட்டேன்.

புது வீடு கட்டி கமர்சியல் மின் இணைப்பு வாங்கியிருந்தார்கள். 
கமர்சியல் இணைப்பை வீட்டு இணப்பாக மாற்ற 
3 மாதமாக அலைந்துள்ளார்கள். 
என்ன என்னவோ காரணங்கள் கூறி 
ஏதோ எதிர் பார்ப்பது போல நடந்து கொண்டார்களாம்....
இன்னும் மாற்றி தரவில்லை என்றார்கள்....


ஒரு வெள்ளை பேப்பரில் ...
மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின்
விதி 21ன் கீழ் காலதாமதத்திற்கு காரணமும் ...
விதி 21ன் உட்பிரிவுகளின்படி ....
நுகர்வோருக்கான காலதாமத இழப்பீட்டு தொகை வழங்கும்படியும்,
காரணமான அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கும்படியும்
மனு எழுதி மதியம் 1 மணியளவில் நேரில் கொடுத்தேன்....

திருப்பூருக்கும் வந்து விட்டேன்.
4 மணியளவில் தொலைபேசியது......
EB அலுவலகத்திலிருந்து உயர் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து விட்டு வீட்டு இணைப்பாக மாற்றி விட்டோம் என்று கூறினார்களாம்..........

குச்சி எடுத்தாத்தான் குரங்கு ஆடுமுன்னு
சும்மாவா சொல்லி வச்சுருக்கறாங்க....


எங்க வீட்டுக்கு மின் இணைப்பு பெற்ற கதையை படிக்க...

புதிய வீடும் மின் இணைப்பும்

புதியவீடும் மின் இணைப்பும்

‎21 ஆகஸ்ட் 2006....

திருப்பூரே பூர்வீகமாக கொண்டு தாத்தான் பாட்டன் 
எல்லாம் காட்ட வித்து கள்ளு குடிச்ச பழம் பெருமைகளை 
மட்டுமே பேசிக்கொண்டு ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ 
ஆண்டுக்கொரு முறையோ வீதிவீதியாக அலைந்து வாடகைக்கு 
வீடு புடிச்சு சட்டி பானை தூக்கி கொண்டு 
தட்டு முட்டு சாமான்களை வண்டியில ஏத்தி
புது வீட்டுக்கு கொண்டு போய் சேத்தி அப்பப்பா ........ 
எங்க குடும்பத்துல நாங்க அண்ணன் தம்பி ஐந்து பேரோடு 
மொத்தம் பத்து பேர் கூட்டுக்குடும்பம்.... 
இதுக்கெல்லாம் ஒரு விடிவு காலம் தான் இந்த நாள்.......... 

திருப்பூர் மாநகருக்கு அருகில் தொங்குட்டிபாளையத்தில் 
யார் செய்த புண்ணியமோ ஒரு ஏக்கர் நிலம் வாங்கி 
பூமி பூஜை போட்டு வீடு கட்ட ஆரம்பித்தோம் ...... 
பாண்டவர் பூமி போல.............

வீடு கட்டும் பணியை விருப்பமுடன் நான் ஏற்றேன்..... 
(மேற்பார்வை என்ற பெயரில் பொழுதை போக்கத்தான்)

வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டுமே ...... 
திருப்பூர் தாராபுரம் சாலை பொல்லிகாளிபாளையம்
மின்சார அலுவலகத்தில் கேட்ட போது
வீட்டு வரி ரசீது வேணுமுன்னாங்க....... 
(அஸ்திவாரமே முடியல)
ஒன்பதாம் வகுப்பு படிச்ச மூளை வேலை செய்தது..... 
மின்சார சட்டங்களை தேடி படிச்சு ....
வீடு கட்ட தற்காலிக இணைப்புக்கு 50ரூபா கட்டி விண்ணப்பித்தேன்...

அலுவலகத்தில் என்னையும் என் மனுவையும் தவிர்க்கவே பார்த்தார்கள். விடுவேனா கஜினி போல படையெடுத்தேன்.... ஒருவழியாக சைட் விசிட் என வந்தார்கள்.... நான்கு கம்பம் போடனும் நார்மலா ஒரு கம்பத்துக்கு 8000 வரும் நீங்க 24000 குடுங்க போதும் என்றார்கள்...
நானாவது காசாவதுன்னு மனசுக்குள் நினைச்சுகிட்டு சரி சார் என அப்போதைக்கு அவர்களை அனுப்பி வைத்தேன்... 

இதே பொல்லிகாளிபாளையம் மின் அலுவலகங்களுக்கு உட்பட்ட அள்ளாலபுரம், அக்கனம்பாளையம் வடுகபாளையம் போன்ற 
சின்ன சின்ன ஊர்களில் பயன்படாமல் புது புது கம்பங்கள் சும்ம 
கிடைந்ததை போட்டோ எடுத்துக்கொண்டேன்.... 

தகவல் உரிமை சட்டம் பிரபல்யம் ஆகாத கால கட்டம் அது...
திருப்பூர் குமார்நகர் தலைமை மின் அலுவலகத்தில் நேரடியாக 
சில கேள்விகள் கேட்டு மனு கொடுத்தேன்.... 
அப்போது 50ரூபாய்க்கு செலான் எடுக்கனும்.... 

என்னை அமர வைத்து உடனே சம்பந்தபட்டவர்களை 
போனில் காய்ச்சி எடுத்து என் மனுவையும் 50ரூபா 
செலானையும் திருப்பி கொடுத்து அனுப்பி வைத்தார் 
அந்த அதிகாரி. பெயர் மறந்துவிட்டது.... 

என்னை எங்கள் வீடு அமையும் இடத்திற்கு அருகில் உள்ள 
சின்ன சாலை பஞ்சாயத்தை சேர்ந்தது என விஏஓ விடம் சான்று
மட்டும் வாங்கி தாருங்கள் என்றார்.

விஏஓ வா......... அய்யய்யோ..... அப்போழுது தான் 
மணியகார அம்மாவுக்கும் எனக்கும் பட்டா வாங்கரதுல
சண்டை வந்து 3000 ரூபா கேட்டு தாசில்தாரர் வரைக்கும் 
புகார் பண்ணி பைசா செலவில்லாமல் எங்கும் அலையாமல்
பட்டா வங்கியிருந்தேன் மேற்படி இடத்திற்கு.... 

என்னதான் நடக்கும் பார்க்கலாம் என மணியகாரம்மா 
செல்வி என்ற 50ஐ கடந்த காசு பைய்த்தியத்தின் 
அலுவலகத்திற்கு வந்தேன்..... 2006 உள்ளாட்சி தேர்தல் 
சமயம் அது......... உள்ளே 15க்கும் மேற்பட்டோர் பல 
காரணங்களுக்காக காத்திருந்தனர்.... 

என்னை பார்த்ததும் இருக்கையிலிருந்து எழுந்து ஓடோடி வந்து 
கடைசியாக வந்த என்னை மேலதிகாரியை போல மதிப்பு கொடுத்து 
எனக்கான சான்றை வழங்கினார்.... 

அதற்கு வேலையே இல்லாமல் போயிருச்சு...........
காரணம் எங்கள் வீட்டிற்கு அருகில் எங்கெங்கே மின்கம்பம்
போடனுமோ அங்கெல்லாம் குழி தோண்டி கொண்டிருந்தார்கள்..... 

வீடு அஸ்திவாரம் முடிந்து இப்போதுதான் சுவர் எழும்ப 
ஆரம்பித்திருந்தது.............ஒரே நாளில் கம்பம் போட்டு அடுத்த நாள்
லைன் கொடுக்க வந்தார்கள் .... நாங்கள் ஒயரிங் ஆரம்பிக்கவில்லையே.............

45 வயது மதிக்கதக்கவர் என்னை 
”அண்ணா லைன் வந்துருச்சுன்னு இந்த விண்ணப்பத்தில 
கையெழுத்து போட்டு கொடுங்க.நீங்க எப்போ எந்த நேரத்துல 
ஒயரிங் பண்ணினாலும் போன் போடுங்க. 20நிமிசத்துல வந்து 
கனெக்‌ஷன் கொடுத்திடறேன்ன்னு சொல்லி என் வேலைய காப்பாத்துங்கன்னு பரிதாபமாக கேட்டார். கையெழுத்து
போட்டுக் கொடுத்தேன்......... 20 நாள் கழிச்சு ஒயரிங் முடிச்சு
விளக்கு எரிஞ்சுது...... கட்டி முடிக்காத எங்க வீட்டில்.... 

இது தான் எங்க வீட்டுக்கு மின் இணைப்பு வந்த கதை...... 
இன்று வரை எங்க வீட்டுல கம்பத்துல பீஸ் போயிருச்சுனா 
போன் பண்ணினா போதும்.... 10ரூபா கூட வாங்க மாட்டாங்க.....

பொறுமையா படிச்சதுக்கு நன்றி....
இந்த பதிவு விழிப்புனர்வுக்காகவே பதிந்தேன்...
என் சுய தம்பட்டமாக நினைக்காதீர்......நன்றி....

நண்பர் வீட்டுக்கு மின்இணைப்பு வந்த கதை.....
இன்ப `ஷாக்`அடித்த கரண்ட்

Wednesday, August 6, 2008

திருப்பூரும், எதிர்பார்ப்பும்

veyilaan
திருப்பூரிலிருந்து எப்போது ஊருக்கு போனாலும், எதிர்படும், பார்க்கும், பேசும் அனைவரும் நலன் விசாரித்தலும், என் உடல் நீள, அகலங்கள் பற்றி கருத்து கந்தசாமியாகி கருத்து சொல்லலும், எப்போதோ, தினசரியில் படித்த ஒரு திருப்பூர் பற்றிய மிகப்பழைய செய்தி பற்றி விசாரித்தலுக்கு பிறகு, கேட்க ஆரம்பிக்கும் ஒரே விசயம் டி சர்ட், பனியன், ஜட்டி தான் (அடப்பாவிகளா! இதுக்கு தான் இவ்வளவு அக்கறையா விசாரிச்சிங்களாடா?).

ஏதோ, திருப்பூரில் சாலையில் இருபுறமும் இறைந்து கிடக்கும். இல்லையென்றால், கிலோவுக்கு பத்து டி சர்ட் கிடைக்குமென்று எந்த புண்ணியவானோ, சொல்லி விட்டிருக்கிறான் போலும். நான் ஊருக்கு போகுமுன்னேயே என் வீட்டில் முன்பதிவுகள் வேறு. இதற்கு என் பெற்றோரிடமிருந்து சில, பல பரிந்துரைகளோடு கோரிக்கைகள்.
இது என் நண்பன்….
”டேய், அடுத்த தடவை வரும் போது எனக்கு நாலு டி சர்ட் மட்டும்(?!) வாங்கிட்டு வாடா. வந்து காசு வேணும்னாலும்?! (என்ன ஒரு தாராள மனசு) வாங்கிக்கோ (ஏதோ போனா போகுது). புள்ளைகளுக்கு கூட நல்ல நல்லதா இருக்காமே, வரும் போது வாங்கிட்டு வாடா.“
என் புள்ளைங்கட்ட கூட சொல்லியிருக்கேன், மாமா வந்தா வாங்கிட்டு வருவார்டானு! (எங்க கொண்டு போய் கோர்த்து விடுறாங்ங பாருங்க! அவன் வீட்டுப் பக்கம் தலை வச்சு படுப்பேனா இவ்வளவு சொன்ன பிறகு)
என் சொந்தக்காரன் கூட ஒருத்தன் இருக்காண்டா, (எவனுக்குத்தான் இல்லை? தமிழ்நாட்டுல இருக்கிற எல்லாருக்கும் திருப்பூர்ல ஒரு சொந்தக்காரன் இருப்பான்) அவங்கிட்ட கூட சொல்லாம உன்ட்ட ஏன் சொல்றேன். சொன்னா செய்வேன்னு சொல்லித்தான் (ஏன் இளிச்சவாயன்னு எழுதி ஒட்டியிருக்கா?).
ஒவ்வொரு தடவை ஊருக்கு போகும் போதும், எனக்கான உடைகளை விட நான் எடுத்துப்போய் கொடுக்க வேண்டிய ஆடைகள் அதிகம். எனக்கான எதிர்பார்ப்புகளை விட என் பையின் உள்ளிருப்பவைகளைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. முன்பாவது பனியன் தொழிற்சாலையில் பணிபுரியும் போது அங்கிருக்கும் மீத ஆடைகளை எடுத்துப் போகலாம். ஆனால் இப்போது முடியாது. ஆடைகள் வாங்குவதற்கென்று கணிசமான தொகை செலவாகிறது.
ஏம்பா கண்ணுகளா! திருப்பூர் பொழைப்பை பற்றி உங்களுக்கு தெரியாது. இங்க தன்னால நாய் பொழைப்பு பொழச்சிட்டிருக்கோம். பாக்குறதுக்கு பள பளன்னு தான் தெரியும். ஆனா, பட்டுப்பூச்சி மாதிரி சிக்கி சின்னாபின்னமாயிட்டிருக்கோம்னு உங்களுக்கு எப்படி தெரியும்?
என் நெருங்கிய உறவினர் கனடாவிலிருந்து வரும் போது, எனக்கு என்ன வாங்கி வருவது என கேட்டிருக்கிறார்? மேற்சொன்ன காரணத்தினாலே ஞானோதயம் பெற்ற நான், ஒன்றும் வாங்கி வரவேண்டாம் என மறுத்து விடுவேன்.
எல்லா இடத்துலேயும் இருக்கிறவங்களை விட திருப்பூர்ல இருக்கிறவங்களுக்கு ஆயுட்காலம் குறைவு. எந்த வேலை எடுத்தாலும் அவசரம்! அவசரம்! தான். மன அழுத்தம், தூக்கமின்மை, காலநேரமில்லா உழைப்பு.

காலையில எந்திரிச்சு, ‘அளவு’ தண்ணீரில் ‘அனைத்தையும்’ முடித்து விட்டு, (தண்ணீர் நிறைய செலவு பண்ணினா, வாடகை வீட்டை காலி பண்ணச்சொல்லிருவாங்ங. வீட்டை வாடகைக்கு விடுறவங்களப் பத்தி ஒரு தனி பதிவு போடற அளவுக்கு விசயமிருக்கு).
நான் முன்னால் தங்கியிருந்த ஒரு அறை என்ற பெயருடைய இடத்திற்கு ரூ.600/- மாதவாடகை. அறையின் அளவு – ஒரு பாய் விரிக்கும் அளவு (ஆழியூரான் கவனிக்க!). காலைக்கடன் கழிப்பதற்கு வரிசை மற்றும் ஒரு சின்ன வாளி தண்ணீர். சுத்தம் செய்வததற்கு இன்னொரு வாளி தண்ணீர். குளிப்பதற்கு ஒரு பெரிய வாளி தண்ணீர். அதற்குள் உள்ளாடை, துண்டு, உடம்பு அனைத்தையும் நனைத்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீர் நிறைய செலவழிக்கிற வீட்டுல காசு தங்காது (உங்களை எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது) என்ற சமாளிப்புகள் வேறு. திருப்பூர் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அரசு எத்தனை திட்டங்கள் போட்டும், தண்ணீர் கொடுக்க மனம் வராது வீட்டு உரிமையாளர்களுக்கு. தனி சட்டம் தான் போட வேண்டும்.

எல்லாம் முடிஞ்சு வேலை செய்யுற எடத்துக்கு போய் சேர்றதுக்குள்ள படுற பாடு இருக்கே. போக்குவரத்து நெரிசல், வாகனப்புகை, தூசுப்படலம் இத்தனையும் தாண்டி போனா, போன உடனே ஏதோ ஒரு பிரச்சனை குத்த வச்சு உக்காந்திருக்கும் நமக்காக. சரி, அத முடிக்கலாம்னு பார்த்தா, இன்னோன்ன தொணைக்கு கூட்டிட்டு வரும். இதற்கிடையில் ஏகப்பட்ட தொலைபேசி உள், வெளி அழைப்புகள் வேறு. பெரும்பாலும் நடுநிசி அல்லது அதற்கு மேலும் வேலை இருக்கும்.
தண்ணீர், தேநீர், இயற்கை உபாதைகள் அனைத்தும் நேரத்துக்கு முடியாது. குறைந்தது மூன்று மணிக்கு மேல் மதியஉணவு என்பதையே நினைத்து பார்க்க முடியும். இரவு உணவு எத்தனை மணி என்று கணக்கே கிடையாது. ஆனால் காலையில் சரியான் நேரத்துக்கு இருக்க வேண்டும்.
நாங்களெல்லாம் சிரமப்படாமலா வேலை செய்றோம்?னு நீங்க கேட்க நினைக்கிறீங்க. புரியுது! புரியுது! ஆனா திருப்பூர்ல வேலை பாக்கிறவங்கள மாதிரி கிடையாது.
பனியன் தொழிற்சாலைகளுக்குள் வேலை செய்பவர்களுக்கு பனியன் துணிகளை வெட்டும் போது பறக்கும் பொடி தூசுகளினாலும், மற்றவர்களுக்கு சாலையில் பறக்கும் மண் தூசிகளினாலும் மூக்கடைப்பு பிரச்சனை அடிக்கடி வரும்.

பனியன் தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த இடங்கள் அனைத்தும் வெப்பமாய் இருக்கும். இரவு படுக்கும்போது நிச்சயம் இலகுவாக சிறுநீர் கழிக்க சிரமப்பட வேண்டியிருக்கும்.
கழிவு வேதி கனிமங்கள் கலந்த நீரை (பெரும் பகுதி நிலத்தடி நீர் மாசுபட்டிருக்கிறது) உபயோகப்படுத்துவதால் அரிப்பு, ஒவ்வாமை போன்ற தோல் வியாதிகள் வரும்.
இயற்கை மற்றும் செயற்கை மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகளில், இருசக்கர வாகன வித்தை செய்வதால் முதுகு வலி ஒன்றிரண்டு வருடங்களில் நிச்சயம்.
நீங்கள் எங்காவது சாலையின் இடது பக்கம் ஒரு வாகனத்தை முந்தி செல்லும் வாகன ஓட்டியை (ஆட்டோ,வேன்,லாரி,பேருந்து ஓட்டிகளும் கூட) பிடித்து விசாரித்தால், அவர் நிச்சயம் திருப்பூரில் வண்டி ஓட்டியவராயிருப்பார். டி.வி.எஸ் 50 என்ற வாகனம் அதன் தயாரிப்பு நிறுவனம் நிர்ணயித்த ஆயுட்காலங்களையெல்லாம் கடந்திருக்கும். அந்த வண்டியை அவர்களே ஆச்சரியப்படும் வேகத்தில் ஓட்டுவார்கள். முக்கியமான விசயம் பெரும்பாலான வண்டிகளில் நிறுத்து விசை சரியாக வேலை செய்யாது.
சாலை விதிகளை ஒருவரும் மதிப்பதே கிடையாது (உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தில் பேருந்தின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் செல்கின்றன).

மாதச் சம்பளம் வாங்குபவர்களின் பொருளாதாரத்திற்கேற்ற உணவகங்கள் கிடையாது. சுவையான உணவு சுகாதாரமற்ற நடைபாதைக் கடைகளில் இரவு மட்டும் கிடைக்கும். மழை நாட்களில் அதுவும் கிடையாது. மதுரையில் கிடைப்பது மாதிரி சூடான, சுவையான இட்லி கிடைப்பது அரிதிலும் அரிது. இங்கு ‘குஷ்பு இட்லி’ என்ற பெயரில் பெரிய வெள்ளை பணியாரம் மட்டுமே கிடைக்கும். பெரிய உணவகங்களில் சுவையான உணவிற்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியதிருக்கும்.

மற்ற ஊர்களைக் காட்டிலும் காய்கறி, மளிகை, மாமிச உணவு பொருட்களின் விலை மிக அதிகம். ஏன் பிரபல பால் பை நிறுவனங்கள் (ஆரோக்யா) கூட திருப்பூருக்கு கூடுதலாக தனி விலை நிர்ணயித்திருக்கின்றன.
தேநீர் நிலையங்களுக்கு பஞ்சமில்லை. மூலைக்கு மூலை கேரளத்திலிருந்து சேட்டன்மார்கள் சகோதரர்கள், உறவினர்கள் சகிதம் இங்கு வந்து ‘பேக்கரி’ என்ற பெயரில் டீ கடை வைத்து சுடுதண்ணியில், அளவுக்கதிகமான சர்க்கரை போட்டு கலக்கி கொடுத்து பண்ணும் டீக்கொடுமையில், உடலின் சர்க்கரை அளவு கணிசமாக ஏறிவிடும்.

ஞாயிறு மட்டும் விடுமுறை. சில வாரங்களில் அதற்கும் ஆப்பு. பொழுது போக்குவதற்கென்று திரையரங்குகளும், ஆன்மீக ஆலயங்களும், அரசு ஆலயங்களும் மட்டும் தான். விடுமுறை நாட்களில் திரையரங்குகளின் பக்கமே செல்ல முடியாது.

இவ்வளவு சிரமங்களுக்கிடையில் வேலை செய்ய வேண்டுமா? என்ற கேள்வி உங்களுக்கு தோன்றும். அதற்கு பதில் – மலிந்து கிடக்கும் வேலை வாய்ப்பு மற்றும் உழைப்புக்கேற்ற ஊதியம்.
என் உறவினர் கனடாவிலிருந்து நான் எதுவும் கேட்காமலேயே எனக்காக ஒன்று வாங்கி வந்திருந்தார். அது என்னவென்று தெரியவேண்டுமென்றால் இதை அமுக்குங்கள்.
படங்களுக்கு நன்றி (Thanks for the photos) - திருப்பூருக்கு வருகை தந்த ஒரு சப்பானிய சீமான்
அனுபவம்

Monday, August 4, 2008

குசேலன் புறக்கணியுங்கள்!!!

"ஒகேனக்கல் விவகாரத்தில் நான் தவறாகப் பேசிவிட்டேன். இனி மீண்டும் அந்தத் தவறை திரும்பச் செய்ய மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்

"ரஜினி ஒரு சந்தர்ப்பவாதிதான் பிழைக்க தமிழ் ரசிகர்களை சுரண்டி பிழைத்ததெல்லாம் மறந்து விட்டாயா? அல்லது ஒகேனக்கல் உண்ணாவிரதத்தின் பொழுது நீ உணர்ச்சி பொங்க நடித்து தமிழனை ஏமாற்றினாயே! அதுவும் மறந்து விட்டதா?...
"ஒகேனக்கல் விவகாரத்தில் நான் தவறாகப் பேசிவிட்டேன். இனி மீண்டும் அந்தத் தவறை திரும்பச் செய்ய மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்"

திரைப்பட வெளியீட்டிற்கும் தன் குடும்பத்தை மறந்து, தன் குழந்தைக்கு குடிக்க கஞ்சியில்லாத போதும் உன்னுடைய கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணியவன் உன்னுடைய பாழாய் போன தமிழ் ரசிகன்.

தமிழ் நாட்டில் சம்பாதிதத்தை எல்லாம் கர்நாடகாவில் முதலீடு செய்த உன்னை தான் தமிழ் ரசிகன் முழு முதற் கடவுளாய் பார்க்கிறான்.காலத்திற்கு தகுந்தாற் போல் மாறுவது பெரிய மனிதனுக்கு அழகா?. என்றும் ஒரே பேச்சு பேசுபவன் தான் பெரிய மனிதன்.
தமிழ் நாட்டு ரசிகன் முன்பு "தமிழன்" என்று கூறியே பல கோடிகளை சம்பாதித்து, இன்று கன்னட அமைப்புகள் முன்பு கன்னடத்திலேயே மன்னிப்பு கேட்ட மானங்கெட்டவனின் மதி கெட்ட பேச்சுகள் சில...

1995 - பாட்சா: இது காசு கொடுத்து சேர்த்த கூட்டம் இல்லை...அன்பால தானா சேர்ந்த கூட்டம்....!

2007 - சிவாஜி:பன்னிங்கதான் கூட்டமா வரும்....!

1996 - சட்டசபை தேர்தல்:ஜெயலலிதாக்கு ஒட்டு போட்டா தமிழ் நாட்டை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது....!

2004 - மக்களவை தேர்தல்:சகோதரி ஜெயலலிதா ஆதரவு பெற்ற கட்சிக்கு ஒட்டு போட்டேன்....!
சகோதரி ஜெயலலிதா ஒரு தைரியலக்ஷ்மி....!

2008 - ஒகேனக்கல் உண்ணாவிரதம்:நம்ம உரிமைய தடுக்குறவங்கள உதைக்க வேண்டாமா?

2008 -குசேலன்:அய்யா மன்னிச்சுடுங்க.....என் தப்பை உணர்ந்துட்டேன்....தயவு செய்ஞ்சு என் படத்தை ரிலீஸ் பண்ண அனுமதி கொடுங்க.....!

ஐய்யா....அம்மா....!தமிழா!! மாற்றானுக்கு மண்டியிட்டது போதும்... ஆண்டாண்டு காலமாக திரையுலகினற்கு நீ தீப்பந்தமாய் இருந்தது போதும்..இளிச்சவாய் தமிழனே, இனியாவது விழித்துக்கொள்!மானமுள்ள தமிழர் யாவரும் இந்த குசேலன் படத்தை திரையரங்குகளில் பார்ப்பதை புறக்கணியுங்கள்!...

Sunday, August 3, 2008

கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா?

இந்தக் கதையை பொதுவாகவும் திருவள்ளுவர் மனைவியோடு இணத்தும் சொல்வார்கள். கொங்கணவ முனிவர் காட்டில் செல்கையில் அவர் மீது ஒரு கொக்கு எச்சமிட்டுவிட்டது. அவர் கோபத்தோடு மேலே நிமிர்ந்து பார்த்தார். அவரது தவ வலிமையில் கொக்கு எரிந்து சாம்பலாகிவிட்டது. அவர் திருவள்ளுவர் வீட்டுக்கு பிச்சை கேட்டு வந்தார். நெடு நேரமாகியும் வள்ளுவர் மனைவி பிச்சை போட வரவில்லை. அவர் கணவருக்கு பணிவிடை செய்துகொண்டிருந்தார். பின்னர் வெளியே பிச்சை போட வந்த போது கொங்கணவ முனிவர் அதே கோபத்தோடு வள்ளுவர் மனைவியயைப்பார்த்தார். ஆனால் அவரது கோபம் வள்ளுவர் மனைவியை எரிக்கவில்லை. அதுமட்டுமல்ல , வள்ளுவர் மனைவி சிரித்துக்கொண்டே கொக்கு என்று நினத்தாயோ கொங்கணவா என்று கேட்டாராம். பத்தினிப் பெண்களுக்கு முக்காலமும் உணரும் சக்தி உண்டு என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது. முனிவர் தன்னுடையதவ வலிமையை விட கடைமையைச் செய்யும் பெண்ணுடைய தவ வலிமை பெரியது என்பதை உணர்ந்தார்

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

எல்லா நண்பர்களுக்கும்,
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
சூப்பர்ரப்பூ