Thursday, January 24, 2013

இன்ப `ஷாக்` அடித்த கரண்ட்

சபாஷ் நண்பரே...
நண்பர் மணி ஒரு பனியன் கம்பனியின் மேலாளர்...
நேற்று (23.01.2013) மதியம் அலை பேசினார்...

மணி:  அண்ணா.... மணி பேசறேன்.... (என்னை விட மூத்தவர்)  
நான் : சொல்லுங்க மணி....
மணி;  எங்க அக்கா வீடு கட்டியிருக்காங்க....
நான் ; வாழ்த்துக்கள்.......( பணம் கீது கேட்டுருவாரோ)

மணி; கரண்ட் லைன் வாங்க நேத்து ஆபிஸுக்கு போனாங்க...
நான்: சரி....( நமக்கு ஏதோ வேலை வந்துருச்சு)
மணி: ஆபிஸ்ல பணம் 2500 வாங்கியிருக்காங்க.... லைன் வர
            பத்து நாள் ஆகுமாம்... லைன் கொடுக்கும் போது
            ரூ 1000 கொடுக்கனுமாம்...அப்படியாண்ணா....?
நான்; 2500 க்கு ரசீது கொடுத்தாங்களா?
மணி:  50 ரூவாய்க்கு ஒன்னு 1550ரூவாய்க்கு ஒன்னு தந்தாய்ங்க...

(புரிந்து விட்டது..... ஒருமுனை மின் இணைப்பு வாங்க இவ்வளவுதான்....
மீதம் 900 ரூபாயும் மறுபடி 1000 ரூபாயும் அன்பளிப்பு........

ரூ 50 விண்ணப்பகட்டணம் கட்டி விண்ணப்பித்தால் ஏழு நாட்களுக்குள்
இணைப்பு கொடுத்தே ஆகவேண்டும் . இல்லையெனில் தாமதிக்கும்
ஒவ்வொரு நாளுக்கும் ரூ100 இழப்பீடு நுகர்வோருக்கு வழங்க வேண்டும்...
மீட்டர் கட்டணம் + இணைப்பு கட்டணம்=1550 மட்டுமே.......

களபணி உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட்டுத்தான்
விண்ணப்ப கட்டணம் வாங்கி ரசீது போடுவார்கள்....)

நான் : என்ன பண்ணலாம்?
மணி: நீங்க சொல்றதை செய்யலாம்....
நான் ; அக்காவை பாத்து கேட்டுக்கங்க.... மின் துறை விஜிலென்ஸ்
             போலாம்..... மீதம் 1000 கொடுக்கும் போது புடிச்சரலாம்...
மணி: சரிங்க.....

அரை மணி நேரம் கழித்து.......

மணி; அக்கா வேண்டாமுண்ணுட்டாங்க......
             கரண்ட் கிடைக்காதுண்ணு பயப்படறாங்க......
நான் ; என்ன பண்ணலாம்?
மணி; ஏதோ ஒன்னு பன்னுங்க.... நாங்க வரமாட்டோம்......
           
   ( என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை ... )

யோசித்தேன்....
தகவல் உரிமை சட்டத்துல கிடுக்குபுடி கேள்வி கேட்கலாமா?        
நாள் ஆயிரும் ... ஆனா சாதிச்சரலாம்......
யோசித்து கொண்டே ... இணையத்தை உயிர்பித்தேன் ...
TNEB... இணைய பக்கத்தில் தொடர்பு கொள்ள என்ற பகுதியில்
அந்த ஏரியா JE எண் கண்டு புடிச்சு பேசினேன்....

நான் ; வணக்கம் சார் ...என் பேரு சரவணன்ங்க...
             திருப்பூர் தாராபுரம் ரோட்டுல இருந்து பேசறேன்....
     JE; சொல்லுங்க...
 நான்; எம் ஜி ஆர் நகர்ல... பாக்கியலட்சுமி அக்காகிட்டே லைன்
              கொடுக்க 2500 வாங்ட்டீகளாம்......
      JE : நேர்ல வாங்க ... பேசலாம்.....
நான்: நேர்லயெல்லாம் வரமுடியாதுங்க....
       JE: அவங்களை வரசொல்லுங்க....... விசாரிக்கிறேன்.....
நான் : அவங்க வந்து தான் பணம் அதிகமா வாங்கியிருக்கீங்க....
              அவங்க இனி வரமாட்டாங்க......
              நீங்க போய் அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு பணம்
             திருப்பி தர முடியுங்களா? முடியாதா? ... நீங்க ஒரு அதிகாரி
             உங்களை சங்கடபடுத்த விரும்பலை....
              இனி உங்க விருப்பம்.....
     JE: நான் விசாரிக்கிறேன்..........

ஒரு மணி நேரத்தில் அவுங்க வீட்டுக்கு போய் பாத்துட்டு ஆள்
இல்லாததால் அந்த அக்கா வேலை செய்யற கம்பனிக்கு போய்
பணம் 900த்தை கொடுத்துட்டு மன்னிப்பு கேட்டுருக்காங்க..........
சாயந்தரம்  வீட்டுக்கு வந்தா  EB காரங்க வீட்டுல காத்துட்டு இருக்காங்க...
லைன் கொடுக்க...............

 பணம் 2500 மறுபடியும் 1000 கொடுத்தாலும் பத்து நாள் ஆகுமுன்னு
சொன்னவங்க இரண்டு மணி நேரத்துல லைன் கொடுத்ததை
பாத்து ஆச்சிரிய பட்டு நண்பர் மணி எனக்கு போன் பண்ணினார்

மணி: என்னண்ணா சொன்னீங்க.... உடனே லைன் வந்துருச்சு...
நான்: உண்மையை சொன்னேன்.............( பாட்ஷான்னு நினைப்பு)
 புதியவீடும் மின் இணைப்பும்
எங்க வீட்டுக்கு கரண்ட் வந்த கதை கிளிக்பண்ணி படிச்சு பாருங்க...
  

Wednesday, January 9, 2013

திருப்பூர் குமரன்


1932 ஆம் ஆண்டு.  ஜனவரி9
தமிழகத்தில் ‘சட்ட மறுப்பு இயக்கம்’ என்ற அஹிம்சை போராட்டம் பரவிக் கொண்டிருந்தது. அச்சமயத்தில் திருப்பூர் தேசபந்து இளைஞர் மன்ற தலைமையகத்தில் உறுப்பினர்கள் மறுநாள் நடக்கவிருக்கும் மறியல் போராட்டத்திற்கு தலைவரை தேர்ந்தெடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலேய கைகூலிகளான காவல்துறையினரை எதிர்க்க யார் தான் முன் வரப் போகிறார்கள்?
”நான் தலைமை ஏற்கிறேன்”
முன் வந்தவர் பெயர் குமரன்.
”குமரா, இதன் அபாயத்தை நீ அறிவாய் அல்லவா?”

 கேட்டவர் பி.எஸ் சுந்தரம் குழுவிலேயே கொஞ்சம் வயது மூத்தவர்
“நன்றாக அறிவேன்” என்றார் அந்த வீரர்.
முடிவாக போராட்டத்திற்க்கு பி.எஸ் சுந்தரம் தலைமை ஏற்கவும் குமரன் உள்ளிட்ட பதினொரு இளஞ்சிங்கங்கள் ‘சட்ட மறுப்பு இயக்க’ த்தை முன்னெடுப்பது என்றும் முடிவானது.
மறுநாள் ஜனவரி10
 நகரத்தின் மையத்தில் 
(இன்றைய குமரன் சாலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு)
பி.எஸ் சுந்தரம் தலைமையில் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது காவல் படையினர் அணி வகுத்து எதிர் திசையிலிருந்து வந்தனர்.
“கலைந்து செல்லுங்கள். உடனே கலைந்து செல்லுங்கள்”
கலைந்து செல்லவா கூடியிருக்கிறார்கள்.....

அவர்கள் எதிர்பார்த்தது போல் ஒருவரும் கலைந்துச் செல்லவில்லை. 
குமரன் தேசியக் கொடியை பிடித்துக் கொண்டு கூட்டத்தின் முன் வரிசையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார். கூட்டத்தின் இறுமாப்பை பார்த்து வெகுண்ட வெள்ளைகார கூலி காவல் படை தலைமை அதிகாரி முகமது “சார்ஜ்” என்று ஆணையிட்டார். 
காவலர்கள் சிதறி ஓடிச் சென்று போராட்ட வீரர்களை தடியினால் அடிக்க தொடங்கினர்.  கூட்டம் அசையவில்லை. அதிகாரி குமரனை நெருங்கி “நீ கொடியை கீழே போட்டுவிட்டால் கூட்டம் கலைந்துவிடும். உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்.” என்று கூறினார்.
”என் தேசக் கொடியை கைவிட கையூட்டு கொடுக்கத் துணிந்த கயவனே. அது உன் கனவிலும் நடக்காது” என்று பதிலளித்த குமரன், போராட்ட வீரர்களுடன் சேர்ந்து ”வந்தே மாதரம்! வந்தே மாதரம்” என்று கோஷங்கள் எழுப்பினார்.
ஆத்திரமடைந்த ஒரு காவலாளி தன் கைத்தடியால் குமரனின் கபாலத்தில் ஒங்கி அடித்தார். கபாலம் பிளந்து உடல் முழுவதும் ரத்தம் சிந்தியது. 
அந்த நிலையிலும் கையிலிருந்த தேசிய கொடியை கீழே விடாமல் மயக்கமுற்றார். 
திருப்பூர் குமரன் நினைவு இல்லம் .திருப்பூர் ரயில் நிலையம் முன்பு.
ஜனவரி11
மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் தன் இருபதெட்டாவது வயதில் குமரன் உயிர் துறந்தார்.
தாய்நாட்டின் விடுதலைக்காக தன் உயிரை அர்பணித்த திருப்பூர் குமரன் அன்றிலிருந்து “கொடி காத்த குமரன்” என்று அழைக்கப்பட்டார்.
உம் நினைவு நாளில் நம்நாடு இன்று உமக்காக தலை வணங்குகிறது. திருப்பூர் பெருமை கொள்கிறது.....