Wednesday, October 31, 2012

விழித்திருப்போம்........


சட்டம் நம் கையில்.............

Consumer Protection Act 1986
இச்சட்டம் தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என அழைக்கப்படுகிறது. 1986 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் தேதியன்று அமுலுக்கு வந்தது. ஏற்கனவே அமுலில் உள்ள சட்டத்தின் மூலம் நிவாரணம் பெற வாய்ப்பு இருந்தும் தனியாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டதின் அடிப்படை நோக்கமே – எளிய முறையில், குறுகிய காலத்தில், செலவில்லாமல் நிவாரணம் பெற வேண்டும் என்பதே. சாதாரமாக, நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்படும் பொழுது அது சிவில் வழக்காக மாறிவிடும். இதனால் வழக்கு, நீதிமன்ற நடைமுறைப்படியே நடை பெற்வதால் காலதாமதம் ஏற்படுவதுடன், பெரும் செலவும் ஏற்படும். பெரும் தொகை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் நீதி மன்றத்தை அணுகுவது இல்லை. இச்சட்டத்தின் மூலம் இந்த குறைபாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இனி அது பற்றி பார்க்கலாம்.
நுகர்வோர் நீதிமன்றங்களின் ( Consumer Court ) அமைப்பும், செயல்பாடும்:
கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று இருப்பதை போலவே இச்சட்டப்படி – மாவட்ட அளவில் ” மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள்”, மாநில அளவில் “மாநில ஆணையம்”, தேசிய அளவில் ” தேசிய ஆணையம்” அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம்:
20 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளை, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தான் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது கிடையாது. இதனால் வழக்கு தொடருவதற்கு தகுதியே இல்லாத பிரச்சனைக்கெல்லாம் வழக்கு தொடர ஆரம்பித்தனர். இதில் எதிர் தரப்பினரை பிளாக் மெயில் செய்பவர்களும் அடங்கும். இது போன்ற வழக்குகளுக்கு அவர்கள் ஆஜராவது கிடையாது. இதனால் வழக்கு தள்ளுபடியாகும் நிலை ஏற் பட்டது. இதனால் தவறே செய்யாத எதிர் தரப்பினர்களுக்கு கால விரயம் மற்றும் செலவு ஏற்படுவதையும், நீதிமன்றத்தின் நேரம் வீணாவதையும் கருத்தில் கொண்டு 2006 ம் ஆண்டில் கீழ் கண்டவாறு கட்டணம் நிர்ணயம் செய்ய்ப்பட்டு ள்ளது.
  • 1 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு = 100 /-
  • 1லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-
  • 5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-
  • 10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /-
வழக்கு தொடர தேவையான தகுதிகள்:
  1. வழக்கு தொடருபவர் நுகர்வோராக இருக்கவேண்டும். வழக்கு அவர் சம்பந்தப் பட்டதாக் இருக்கவேண்டும்.
  2. நுகர்வோர், எந்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட எல்லைக்குள் ( Jurisdiction) இருக்கிறாரோ அதில் தான் வழக்கு தொடரவேண்டும்.
  3.  புகாருக்கான ஆதாரங்கள் இருக்கவேண்டும்.
  4. பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து 2 வருடங்களுக்குள் வழக்கு தொடர வேண்டும்.
யார் மீது வழக்கு தொடர முடியும்?
1. நமக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும். இதில் தனியார், அரசு நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருமே இதில் உட்படுவர்.
உதாரணம்: மளிகை கடை, டிபார்ட்மெண்டல் ஸ்டோர், பேக்கரி, சைக்கிள் – பைக் – கார் – லாரி விற்பனையாளர், மெடிகல் ஷாப், ரேஷன் கடை போன்றவை.
2. பணம் வாங்கிக்கொண்டு வழங்கப்படும் சேவைகள், தனியார் மற்றும் அரசு துறை நிறுவனங்கள் அனைத்துமே இதில் அடங்கும்.
உதாரணம் : மின்சார வாரியம், குடிதண்ணீர் சப்ளை, இன்ஸூரன்ஸ் கம்பெனி, வங்கிகள், மருத்துவ மனைகள், கியாஸ் கம்பெனிகள், சப் -ரிஜிஸ்டிரார் அலுவலகம், போன்றவைகள்.
எந்தெந்த துறைகள் எல்லாம் இதில் அடங்கும் என சட்டத்தில் பட்டியலிடப் படவில்லை. காரணம். சேவை என்ற வார்த்தைக்கு முழுமையான விளக்கம் கொடுக்க முடியாது. வார்த்தைக்கான விளக்கம், வழக்குக்கு வழக்கு விரிவடையும் என்பதே உண்மை. உதாரணத்திற்கு சப்-ரிஜிஸ்டிரார் ஆபீஸை எடுத்துக்கொள்ளலாம். இந்த சட்டம் வந்த பின்பு, பலர் இந்த அலுவலகத்தில் அவஸ்தை பட்டு வந்தாலும், இது அரசு அலுவலகம் என நினைத்து விட்டு விட்டனர். பல வருடங்கள் இப்படியே கழிந்தது.
ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் ஒரு சொத்து வாங்க முடிவு செய்து, அதற்கு சம்பந்தப்பட்ட சப்- ரிஜிஸ்டிரார் அலுவல்கத்தில் வில்லங்க சர்டிபிகேட்டிக்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் செய்தார். எந்த வில்லங்கமும் இல்லை என சர்டிபிகேட் கொடுத்து விட்டனர். அதை நம்பி, அவர் அந்த சொத்தை வாங்கி விட்டார். அதன் பின்பு தான் அதில் வில்லங்கம் இருப்பது தெரிய வந்தது. அதனால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. தவறான வில்லங்க சர்டிபிகேட் டிப்பார்ட்மெண்ட் கொடுத்ததினால்த் தான் நஷ்டம் என்றும், வில்லங்க சர்டிபிகேட் வழங்குவது என்பது பணத்தை பெற்றுக்கொண்டு வழங்கப்படும் சேவை என்பதால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி குறைபாடான சேவை என்பது அவர் முடிவு. அவர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அரசு தரப்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி தங்கள் மீது வழக்கு தொடர முடியாது என்றும், சர்டிபிகேட்டில் தவறுகள் இருந்தால் இலாகா பொறுப்பு அல்ல” என குறிப்பிட்டே வழங்கட்டுள்ளதால் தாங்கள் பொறுப்பல்ல என வாதம் செய்தனர். ஆனால் அவர்களின் ஆட்சேபனையை நிராகரித்த் நீதிமன்றம் மனுதாரருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. இது சட்டம் பற்றிய விளக்கம் விரிவடையக் கூடியது என்பதற்கு ஒரு உதாரணம்.
வழக்கு தொடர தேவையான முன் நடவடிக்கைகள்:
உதாரணத்திற்கு நாம் ஒரு கடைக்குப்போய் ஒரு பொருள் வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதன் பாக்கிங்கில் போடப்பட்ட விலைக்கு அதிகமாக பணம் வாங்கினாலோ, எடை மற்றும் அள்வு குறைவாக இருந்தாலோ அல்லது தரம் குறைவாக இருந்தாலோ உடனடியாக அதைப் பற்றி கடைக்காரரிடம் சுட்டிக்காட்டுங்கள். அவர் தவறை சரி செய்ய மறுத்தால், அவருக்கு நீங்களே ” குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதை சரி செய்யாவிட்டால் நுகர்வோர் வழக்கு தொடரப்படும்” என அத்தாட்சியுடன் கூடிய பதிவு தபாலில் நோட்டீஸ் அனுப்புங்கள். அவருக்கு நோட்டீஸ் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்பதற்கான் ஆதாரத்தை நோட்டீஸ் காப்பியுடன் வைத்துக்கொள்ளுங்கள். அதைப் போலவே பொருள் வாங்கியதற்கான ரசீதும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
விலை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், விலை அச்சடிக்கப்பட்ட பாக்கிங் கவரை பத்திரமாக வைத்திருங்கள்.
தரம் சம்பந்த பிரச்சனை என்றால், அதே பாக்கிங் கவருடன் பொருளை பாக் செய்ய்து வைத்துக்கொள்ளுங்கள்.
எடை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், நீங்கள் பாக்கிங்கை பிரிப்பதற்கு முன்பே எடை குறைவு என்பதை ஊர்ஜிதம் செய்து விட்டு பாக்கிங்கை பிரிக்காமல் இருக்க வேண்டும். ஒரு வேளை பிரித்துவிட்ட பின்பு தான் எடை குறைவை கண்டு பிடித்தீர்கள் என்றால், பிரிக்கப்பட்ட பாக்கிங்கை ஆதாரமாக வைத்து வழக்கு தொடர முடியாது. எனவே மறுபடியும் அதே கடைக்கு போய், அதே பொருளை, பில் போட்டு வாங்கிக்கொளுங்கள்.
இப்பொழுது சேவை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், சேவைக்கான ரசீது இருக்கவேண்டும். முன்பு குறிப்பிட்ட படியே சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புங்கள். எல்லா அத்தாட்சிகளையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி
சட்டம் நம் கையில்.........

Wednesday, October 24, 2012

காகிதமும் ஆயுதமாகும்

லஞ்சத்துக்கு எதிராக எத்தனையோ அமைப்புகள், நாடு முழுவதும் போராடிக் கொண்டிருக்கின்றன; ஆனாலும், லஞ்சம் ஒழிந்தபாடில்லை; காரணம், இந்த போராட்டங்களிலே மக்களின் பங்களிப்பில்லை. லஞ்சத்தை ஒழிக்க ஆயுதம் ஏந்திப் போராட வேண்டியதில்லை; ஒரே ஒரு காகிதம் போதும். தகவல் உரிமைச் சட்டம் என்பது, இந்திய மக்களுக்குக் கிடைத்த மாபெரும் ஆயுதம்; அதைப் பயன்படுத்தி, லஞ்சத்திலிருந்து தப்பித்திருக்கிறார் ஒரு வாசகர்.

அவரது அனுபவம்...

நான், திருப்பூர், தொங்குட்டிபாளையத்தைச் சேர்ந்தவன். கடந்த 2010, டிச.19ல் கொஞ்சம் மது அருந்தி விட்டு, எனது வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வழியில், போதையில் வாகனம் ஓட்டியோரை போலீசார் பிடித்தனர். ஒவ்வொருவரிடமும் அபராதம் என்ற பெயரில், தலா 2,000 ரூபாய் வாங்கினர்; எதற்கும் ரசீது இல்லை.

பலரும் பணம் கொடுத்துச் சென்று விட்டனர். எனக்கு லஞ்சம் தர விருப்பமில்லை. பணம் தராததால், எனது வண்டியை அருகிலுள்ள டூ வீலர் ஸ்டாண்ட்டில் நிறுத்தச் சொன்னார்கள்; நிறுத்தி விட்டு, வீடு திரும்பி விட்டேன். அதன்பின், பல முறை அணுகியும் போலீசார் என் மீது நடவடிக்கை எடுக்கவில்லை; வண்டியையும் தரவில்லை.

நான் வாக்குவாதம் செய்ததால், எனது ரேஷன் கார்டை வாங்கிக் கொண்டு, வண்டியைக் கொடுத்தனர். பல நாட்கள் அலைந்தும் ரேஷன் கார்டைத் தரவில்லை; நான் தகவல் உரிமைச் சட்டத்தில், "குறிப்பிட்ட தேதியில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக எத்தனை பேர் மீது வழக்கு பதிவானது' என்பது உட்பட பல விபரங்களைக் கேட்டு, எஸ்.பி., ஆபீசுக்கு மனுச் செய்தேன்; பதில் வந்தது.

அன்றைய நாளில் 151 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 2 பேரிடம் மட்டுமே கோர்ட் மூலமாக 1,900 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சோதனை நடந்து 8 மாதங்கள் கழித்தும் அதே நிலைதான்; இந்த விபரங்களை வைத்து, திருப்பூர் எஸ்.பி.,யிடம் நேரடியாக மனு கொடுத்தேன்; அவர் எடுத்த அதிரடியில், அடுத்த ஒரு மணி நேரத்தில் எனது ரேஷன் கார்டு, எனது கைக்கு வந்தது.

எப்படியோ, லஞ்சம் தரக்கூடாது என்று நான் போராடிய போராட்டத்துக்கு வெற்றி கிடைத்தது................ 


தினமலர் 08.01.2012 ல் வெளிவந்த கட்டுரை.................. சாத் சாத் நானே தான்.......................... 

ஆடுறா ராமா.... ஆடுறா ராமா....

28.09.2012
திருப்பூர் அருகே வெள்ளகோவிலில் 
அத்தை வீட்டுக்கு சென்றிருந்தேன். 
பேச்சு வாக்கில் eb யில் ஒரு பிரச்சனை என்றார்கள். 
நமக்கு தான் பிரச்சனை என்றாலே ”அல்வா” மாதரி... 
விவரம் கேட்டேன்.

புது வீடு கட்டி கமர்சியல் மின் இணைப்பு வாங்கியிருந்தார்கள். 
கமர்சியல் இணைப்பை வீட்டு இணப்பாக மாற்ற 
3 மாதமாக அலைந்துள்ளார்கள். 
என்ன என்னவோ காரணங்கள் கூறி 
ஏதோ எதிர் பார்ப்பது போல நடந்து கொண்டார்களாம்....
இன்னும் மாற்றி தரவில்லை என்றார்கள்....


ஒரு வெள்ளை பேப்பரில் ...
மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின்
விதி 21ன் கீழ் காலதாமதத்திற்கு காரணமும் ...
விதி 21ன் உட்பிரிவுகளின்படி ....
நுகர்வோருக்கான காலதாமத இழப்பீட்டு தொகை வழங்கும்படியும்,
காரணமான அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கும்படியும்
மனு எழுதி மதியம் 1 மணியளவில் நேரில் கொடுத்தேன்....

திருப்பூருக்கும் வந்து விட்டேன்.
4 மணியளவில் தொலைபேசியது......
EB அலுவலகத்திலிருந்து உயர் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து விட்டு வீட்டு இணைப்பாக மாற்றி விட்டோம் என்று கூறினார்களாம்..........

குச்சி எடுத்தாத்தான் குரங்கு ஆடுமுன்னு
சும்மாவா சொல்லி வச்சுருக்கறாங்க....


எங்க வீட்டுக்கு மின் இணைப்பு பெற்ற கதையை படிக்க...

புதிய வீடும் மின் இணைப்பும்

புதியவீடும் மின் இணைப்பும்

‎21 ஆகஸ்ட் 2006....

திருப்பூரே பூர்வீகமாக கொண்டு தாத்தான் பாட்டன் 
எல்லாம் காட்ட வித்து கள்ளு குடிச்ச பழம் பெருமைகளை 
மட்டுமே பேசிக்கொண்டு ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ 
ஆண்டுக்கொரு முறையோ வீதிவீதியாக அலைந்து வாடகைக்கு 
வீடு புடிச்சு சட்டி பானை தூக்கி கொண்டு 
தட்டு முட்டு சாமான்களை வண்டியில ஏத்தி
புது வீட்டுக்கு கொண்டு போய் சேத்தி அப்பப்பா ........ 
எங்க குடும்பத்துல நாங்க அண்ணன் தம்பி ஐந்து பேரோடு 
மொத்தம் பத்து பேர் கூட்டுக்குடும்பம்.... 
இதுக்கெல்லாம் ஒரு விடிவு காலம் தான் இந்த நாள்.......... 

திருப்பூர் மாநகருக்கு அருகில் தொங்குட்டிபாளையத்தில் 
யார் செய்த புண்ணியமோ ஒரு ஏக்கர் நிலம் வாங்கி 
பூமி பூஜை போட்டு வீடு கட்ட ஆரம்பித்தோம் ...... 
பாண்டவர் பூமி போல.............

வீடு கட்டும் பணியை விருப்பமுடன் நான் ஏற்றேன்..... 
(மேற்பார்வை என்ற பெயரில் பொழுதை போக்கத்தான்)

வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டுமே ...... 
திருப்பூர் தாராபுரம் சாலை பொல்லிகாளிபாளையம்
மின்சார அலுவலகத்தில் கேட்ட போது
வீட்டு வரி ரசீது வேணுமுன்னாங்க....... 
(அஸ்திவாரமே முடியல)
ஒன்பதாம் வகுப்பு படிச்ச மூளை வேலை செய்தது..... 
மின்சார சட்டங்களை தேடி படிச்சு ....
வீடு கட்ட தற்காலிக இணைப்புக்கு 50ரூபா கட்டி விண்ணப்பித்தேன்...

அலுவலகத்தில் என்னையும் என் மனுவையும் தவிர்க்கவே பார்த்தார்கள். விடுவேனா கஜினி போல படையெடுத்தேன்.... ஒருவழியாக சைட் விசிட் என வந்தார்கள்.... நான்கு கம்பம் போடனும் நார்மலா ஒரு கம்பத்துக்கு 8000 வரும் நீங்க 24000 குடுங்க போதும் என்றார்கள்...
நானாவது காசாவதுன்னு மனசுக்குள் நினைச்சுகிட்டு சரி சார் என அப்போதைக்கு அவர்களை அனுப்பி வைத்தேன்... 

இதே பொல்லிகாளிபாளையம் மின் அலுவலகங்களுக்கு உட்பட்ட அள்ளாலபுரம், அக்கனம்பாளையம் வடுகபாளையம் போன்ற 
சின்ன சின்ன ஊர்களில் பயன்படாமல் புது புது கம்பங்கள் சும்ம 
கிடைந்ததை போட்டோ எடுத்துக்கொண்டேன்.... 

தகவல் உரிமை சட்டம் பிரபல்யம் ஆகாத கால கட்டம் அது...
திருப்பூர் குமார்நகர் தலைமை மின் அலுவலகத்தில் நேரடியாக 
சில கேள்விகள் கேட்டு மனு கொடுத்தேன்.... 
அப்போது 50ரூபாய்க்கு செலான் எடுக்கனும்.... 

என்னை அமர வைத்து உடனே சம்பந்தபட்டவர்களை 
போனில் காய்ச்சி எடுத்து என் மனுவையும் 50ரூபா 
செலானையும் திருப்பி கொடுத்து அனுப்பி வைத்தார் 
அந்த அதிகாரி. பெயர் மறந்துவிட்டது.... 

என்னை எங்கள் வீடு அமையும் இடத்திற்கு அருகில் உள்ள 
சின்ன சாலை பஞ்சாயத்தை சேர்ந்தது என விஏஓ விடம் சான்று
மட்டும் வாங்கி தாருங்கள் என்றார்.

விஏஓ வா......... அய்யய்யோ..... அப்போழுது தான் 
மணியகார அம்மாவுக்கும் எனக்கும் பட்டா வாங்கரதுல
சண்டை வந்து 3000 ரூபா கேட்டு தாசில்தாரர் வரைக்கும் 
புகார் பண்ணி பைசா செலவில்லாமல் எங்கும் அலையாமல்
பட்டா வங்கியிருந்தேன் மேற்படி இடத்திற்கு.... 

என்னதான் நடக்கும் பார்க்கலாம் என மணியகாரம்மா 
செல்வி என்ற 50ஐ கடந்த காசு பைய்த்தியத்தின் 
அலுவலகத்திற்கு வந்தேன்..... 2006 உள்ளாட்சி தேர்தல் 
சமயம் அது......... உள்ளே 15க்கும் மேற்பட்டோர் பல 
காரணங்களுக்காக காத்திருந்தனர்.... 

என்னை பார்த்ததும் இருக்கையிலிருந்து எழுந்து ஓடோடி வந்து 
கடைசியாக வந்த என்னை மேலதிகாரியை போல மதிப்பு கொடுத்து 
எனக்கான சான்றை வழங்கினார்.... 

அதற்கு வேலையே இல்லாமல் போயிருச்சு...........
காரணம் எங்கள் வீட்டிற்கு அருகில் எங்கெங்கே மின்கம்பம்
போடனுமோ அங்கெல்லாம் குழி தோண்டி கொண்டிருந்தார்கள்..... 

வீடு அஸ்திவாரம் முடிந்து இப்போதுதான் சுவர் எழும்ப 
ஆரம்பித்திருந்தது.............ஒரே நாளில் கம்பம் போட்டு அடுத்த நாள்
லைன் கொடுக்க வந்தார்கள் .... நாங்கள் ஒயரிங் ஆரம்பிக்கவில்லையே.............

45 வயது மதிக்கதக்கவர் என்னை 
”அண்ணா லைன் வந்துருச்சுன்னு இந்த விண்ணப்பத்தில 
கையெழுத்து போட்டு கொடுங்க.நீங்க எப்போ எந்த நேரத்துல 
ஒயரிங் பண்ணினாலும் போன் போடுங்க. 20நிமிசத்துல வந்து 
கனெக்‌ஷன் கொடுத்திடறேன்ன்னு சொல்லி என் வேலைய காப்பாத்துங்கன்னு பரிதாபமாக கேட்டார். கையெழுத்து
போட்டுக் கொடுத்தேன்......... 20 நாள் கழிச்சு ஒயரிங் முடிச்சு
விளக்கு எரிஞ்சுது...... கட்டி முடிக்காத எங்க வீட்டில்.... 

இது தான் எங்க வீட்டுக்கு மின் இணைப்பு வந்த கதை...... 
இன்று வரை எங்க வீட்டுல கம்பத்துல பீஸ் போயிருச்சுனா 
போன் பண்ணினா போதும்.... 10ரூபா கூட வாங்க மாட்டாங்க.....

பொறுமையா படிச்சதுக்கு நன்றி....
இந்த பதிவு விழிப்புனர்வுக்காகவே பதிந்தேன்...
என் சுய தம்பட்டமாக நினைக்காதீர்......நன்றி....

நண்பர் வீட்டுக்கு மின்இணைப்பு வந்த கதை.....
இன்ப `ஷாக்`அடித்த கரண்ட்