Wednesday, January 9, 2013

திருப்பூர் குமரன்


1932 ஆம் ஆண்டு.  ஜனவரி9
தமிழகத்தில் ‘சட்ட மறுப்பு இயக்கம்’ என்ற அஹிம்சை போராட்டம் பரவிக் கொண்டிருந்தது. அச்சமயத்தில் திருப்பூர் தேசபந்து இளைஞர் மன்ற தலைமையகத்தில் உறுப்பினர்கள் மறுநாள் நடக்கவிருக்கும் மறியல் போராட்டத்திற்கு தலைவரை தேர்ந்தெடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலேய கைகூலிகளான காவல்துறையினரை எதிர்க்க யார் தான் முன் வரப் போகிறார்கள்?
”நான் தலைமை ஏற்கிறேன்”
முன் வந்தவர் பெயர் குமரன்.
”குமரா, இதன் அபாயத்தை நீ அறிவாய் அல்லவா?”

 கேட்டவர் பி.எஸ் சுந்தரம் குழுவிலேயே கொஞ்சம் வயது மூத்தவர்
“நன்றாக அறிவேன்” என்றார் அந்த வீரர்.
முடிவாக போராட்டத்திற்க்கு பி.எஸ் சுந்தரம் தலைமை ஏற்கவும் குமரன் உள்ளிட்ட பதினொரு இளஞ்சிங்கங்கள் ‘சட்ட மறுப்பு இயக்க’ த்தை முன்னெடுப்பது என்றும் முடிவானது.
மறுநாள் ஜனவரி10
 நகரத்தின் மையத்தில் 
(இன்றைய குமரன் சாலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு)
பி.எஸ் சுந்தரம் தலைமையில் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது காவல் படையினர் அணி வகுத்து எதிர் திசையிலிருந்து வந்தனர்.
“கலைந்து செல்லுங்கள். உடனே கலைந்து செல்லுங்கள்”
கலைந்து செல்லவா கூடியிருக்கிறார்கள்.....

அவர்கள் எதிர்பார்த்தது போல் ஒருவரும் கலைந்துச் செல்லவில்லை. 
குமரன் தேசியக் கொடியை பிடித்துக் கொண்டு கூட்டத்தின் முன் வரிசையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார். கூட்டத்தின் இறுமாப்பை பார்த்து வெகுண்ட வெள்ளைகார கூலி காவல் படை தலைமை அதிகாரி முகமது “சார்ஜ்” என்று ஆணையிட்டார். 
காவலர்கள் சிதறி ஓடிச் சென்று போராட்ட வீரர்களை தடியினால் அடிக்க தொடங்கினர்.  கூட்டம் அசையவில்லை. அதிகாரி குமரனை நெருங்கி “நீ கொடியை கீழே போட்டுவிட்டால் கூட்டம் கலைந்துவிடும். உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்.” என்று கூறினார்.
”என் தேசக் கொடியை கைவிட கையூட்டு கொடுக்கத் துணிந்த கயவனே. அது உன் கனவிலும் நடக்காது” என்று பதிலளித்த குமரன், போராட்ட வீரர்களுடன் சேர்ந்து ”வந்தே மாதரம்! வந்தே மாதரம்” என்று கோஷங்கள் எழுப்பினார்.
ஆத்திரமடைந்த ஒரு காவலாளி தன் கைத்தடியால் குமரனின் கபாலத்தில் ஒங்கி அடித்தார். கபாலம் பிளந்து உடல் முழுவதும் ரத்தம் சிந்தியது. 
அந்த நிலையிலும் கையிலிருந்த தேசிய கொடியை கீழே விடாமல் மயக்கமுற்றார். 
திருப்பூர் குமரன் நினைவு இல்லம் .திருப்பூர் ரயில் நிலையம் முன்பு.
ஜனவரி11
மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் தன் இருபதெட்டாவது வயதில் குமரன் உயிர் துறந்தார்.
தாய்நாட்டின் விடுதலைக்காக தன் உயிரை அர்பணித்த திருப்பூர் குமரன் அன்றிலிருந்து “கொடி காத்த குமரன்” என்று அழைக்கப்பட்டார்.
உம் நினைவு நாளில் நம்நாடு இன்று உமக்காக தலை வணங்குகிறது. திருப்பூர் பெருமை கொள்கிறது.....

6 comments:

perumal karur said...

பகிர்வுக்கு மிக்க நன்றிங்க....

Unknown said...

வெள்ளையரிடம் இருந்து நாட்டை காக்க போராடியது திருப்பூர் குமரன்..

கொள்ளையரிடம் இருந்து நாட்டை காக்க போராடுவது திருப்பூர் சரவண பிரகாஷ்..

Unknown said...

காதால் கேட்டாலும்
படித்தாலும்
வீரம் பொங்குகிறதே....
இந்த மாவீரனின் தியாகத்தை.....
நன்றி....
பெருமாள்
திவாகர்......

நிகழ்காலத்தில்... said...

நன்னாளை நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள் பல...

Unknown said...

வாழ்க வளமுடன்

Unknown said...

மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்...