Friday, March 29, 2013

அன்புள்ள ஆசிரியருக்கு ....

ஆப்ரகாம் லிங்கன் தன்னுடைய மகனின் 
பள்ளி ஆசிரியருக்கு எழுதிய அற்புதமான கடிதம் 
அனைவருமே படிக்கவேண்டிய கடிதம் 
சாரு நிவேதிதா அவர்களின் இணையதளத்திலிருந்து .....

அன்பு மிக்க ஆசிரியருக்கு,

எனது மகன் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது

எல்லா மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல. எல்லா மனிதர்களும் உண்மையானவர்கள் அல்ல. ஆனால் அவனுக்கு கற்றுக்கொடுங்கள்… ஒவ்வொரு போக்கிரி உள்ள இடத்திலும் ஒரு வீரன் உண்டு; ஒவ்வொரு சுயநலமான அரசியல்வாதி உள்ள இடத்திலும் ஒரு தன்னலம் கருதாத தலைவன் உண்டு. ஒவ்வொரு பகைவனுக்கு இடையிலும் ஒரு நண்பன் உண்டு.

இதற்குக் காலம் அதிகம் எடுத்துக் கொள்ளும் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் உங்களால் முடியுமானால் அவனுக்கு கற்றுக் கொடுங்கள். நாம் ஈட்டியது ஒரு டாலர் என்றாலும் கண்டெடுத்த ஐந்து டாலர்களைக் காட்டிலும் அது மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும்.

தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் வெற்றியைக் கொண்டாடவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமையிலிருந்து அவனை விலகி இருக்கச் சொல்லுங்கள்.

மனம்விட்டு சிரிப்பதன் ரகசியத்தை அவனுக்கு கற்றுக் கொடுங்கள். நயவஞ்சகர்களை எளிதில் அடையாளம் காணவும் ஆரம்பத்திலேயே அவன் கற்றுக் கொள்ளட்டும்.

புத்தகங்கள் என்ற அற்புத உலகின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். மேலும், வானில் பறக்கும் பறவைகளின் புதிர் மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் வேகத்தையும் பசுமையான மலையடிவார மலர்களின் வனப்பையும் ரசிப்பதற்கு அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விடவும் தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். மற்றவர்கள் தவறு என்று விமர்சித்தாலும், தனது சுயசிந்தனையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ள அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரடர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப் பயிற்சி அளியுங்கள்.

கும்பலோடு கும்பலாகக் கரைந்து போய் விடாமல் எந்தச் சூழ்நிலையிலும் தனது சொந்த நம்பிக்கையின்படி சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

எல்லா மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும். என்றாலும் அதையெல்லாம் வடிகட்டி நல்லவற்றை மட்டுமே பிரித்து எடுத்துக் கொள்ள அவனுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்பதை அவன் தெரிந்து கொள்ள வேண்டும்.

கண்ணீர் சிந்துவதில் தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், வெற்றுப் புகழுரைகளைக் கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.

நம் திறமையையும், அறிவாற்றலையும் விற்பதில் தவறே இல்லை; ஆனால் அது நமது மனசாட்சியையும் ஆன்மாவையும் பணயம் வைப்பதாக இருந்து விடக்கூடாது என்பதை அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

பெருங்கும்பல் திரண்டு வந்து கூச்சலிட்டாலும், நியாயம் என்று தான் நினைப்பதை நிலைநாட்டுவதற்காகத் தொடர்ந்து போராடுவதற்கு அவனுக்கு நம்பிக்கை அளியுங்கள்.

அவனை அன்பாக நடத்துங்கள். ஆனால் அதிக செல்லம் கொடுத்து மற்றவர்களைச் சார்ந்திருக்க வைத்து விட வேண்டாம். ஏனென்றால் புடம் போட்ட இரும்பு மட்டுமே மிகச் சிறந்ததாக மாறுகிறது.

தவறு கண்டால் கொதித்து எழும் துணிச்சலை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். அதே வேளையில்தனது வலிமையை மௌனமாக வெளிப்படுத்தும் பொறுமையை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

அவன் தன்மீதே மகத்தான நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான் மனித குலத்தின் மீது அவன் மகத்தான நம்பிக்கை கொள்வான்.

இது ஒரு மிகப் பெரிய சவால்தான்; இருந்தாலும் இதில் உங்களுக்குச் முடிந்ததையெல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுத்து விடுங்கள்.

அவன் மிக நல்லவன், எனது அன்பு மகன்.

ஆப்ரஹாம் லிங்கன்.

நன்றி ..சாரு நிவேதிதா ...அவர்களின் இணையதளம்

5 comments:

Palani said...

Lovely

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

perumal karur said...

ஏற்கனவே இதை படித்துள்ளேன் நண்பரே

மீண்டும் படிக்க கிடைத்தமைக்கு மிக்க நன்றி....

அடிக்கடி உங்கள் வலைப்பூவில் பதிவிடுங்களேன்..

திவாகர் திவா said...

மிக்க நன்றி அய்யா...

சரவண பிரகாஷ் said...

நன்றி நண்பர்களே....
....
....
முயற்சிக்கிறேன்
பெருமாள்....